தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட 1842 வழக்குகள் வாபஸ் பெற நடவடிக்கை  எடுத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் வீடுகளில் மாற்றம் செய்ததன் காரணமாகவும் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் மலசலகூடம் அமைத்தல் தொடர்பாகவும், மரக்கிறி பயிர் செய்கை மேற்கொண்டதற்காகவும் அதற்கு எதிராக தோட்ட அதிகாரிகளால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் தொடுக்கப்பட்ட 1842 வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் என இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை, அப்புத்தளை தொட்லாகல தோட்டத்தில்  "நீவ் டைகர்ஸ்" விளையாட்டு கழகத்தில் நடைபெற்ற இரவு பகலாக நடைபெற்ற கரபந்தாட்ட போட்டியை  இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் ஏற்பாட்டு கழக உறுப்பினர்கள்  உட்பட பொது மக்கள்  கலந்துக் கொண்டனர்.

இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களுக்கு வழக்கு தொடரப்பட மாட்டாது. இருந்தாலும் தோட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்களுக்கான தேவையான வளங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தோட்டங்களுக்கு காணிகள் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் இன்று மாறியுள்ளோம். காணிகள் பிரித்து கொடுப்பது தொடர்பாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சே நடவடிக்கை எடுக்கும்.

வீடுகள் கட்டுவதற்கு காணிகள் கொடுக்கப்படும். அத்தோடு, விளையாட்டு மைதானங்கள், ஆலயங்கள் அமைப்பதற்கும் மற்றும் பொது தேவைகளுக்காக காணி பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக தற்போது பெருந்தோட்ட பகுதிகளில் காடாக காணப்படும் தேயிலை மலைகளை மரக்கறி பயிர்செய்கை செய்வதற்கு பிரித்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

இந்த குறுகிய கால பகுதியில் மக்களின் தேவைகளை உணர்ந்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளேன் என்றார்.