ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் உறுதிமொழிகளில் ஒன்றான புதிய அரசியலமைப்புக்கு கட்டாயம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என பிரதியமைச்சர் நளின் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

புதிய அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் அரசியல் சார்ந்தவை அல்ல. மேலும் புதிய அரசியலமைப்பானது ஐக்கிய தேசியக் கட்சினதோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினதோ, மக்கள் விடுதலை முன்னணியினதோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பினதோ சார்பானது அல்ல. 

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பிளவுப்படாத ஒற்றை ஆட்சிக்குள் பௌத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இதேவேளை 2020 ஆண்டு தேர்தலின் பின்னர் ஒருவேளை சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றோர் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவார்களாயின் அரசியலமைப்பை தொகுப்பது சாத்தியமாகாது.

எது எவ்வாறாக இருந்தாலும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு கிடைத்துள்ள சிறந்த தருணம் இதுவாகும். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.