கொள்கை விவகாரங்களில் தீர்மானங்களை மேற்கொள்வதில் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே இருக்கின்றன. அதனால் அவர்களின் பொறுப்பின் கீழ் வருகின்ற பல அரச நிறுவனங்களில் நிருவாக இயந்திரத்தை அரசியல் ரீதியில் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பெரும் கடினமான பணியை எதிர்நோக்குகின்றது என்று தகவலறிந்த அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. 

பொருளாதாரச் சீர்திருத்தம் மற்றும் பொது விநியோகம், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுடபம், விஞ்ஞானம், தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள், விசேட பகுதி அபிவிருத்தி ஆகியவற்றுக்குப் பொறுப்பாக ஐந்து அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள " மற்றைய அமைச்சர்கள் " என்ற வகையின் கீழ் நியமிக்கப்பட்டிருக்கும் இவர்கள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்களாக இருக்கிறா்கள். இவர்களின் அமைச்சுகளின் பொறுப்பில் பல அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் வருகின்றன.

அமைச்சர்களுக்கும் அமைச்சுக்களுக்கும் ஒதுக்கவேண்டிய பொறுப்புக்களையும் கடமைகளையும் தீர்மானிப்பதில் பிரதமருடன் ஆலோசனை கலப்பது அவசியம் என்று ஜனாதிபதி கருதும்பட்சத்தில் அவ்வாறு ஆலோசனை கலந்து எந்தெந்த அமைச்சின் கீழ் எந்தெந்தப் பொறுப்புகள் கொடுக்கப்படவேண்டும் என்பதைத் தீர்மானிக்லாம் என்று அரசியலமைப்பின் உறுப்புரை 44 (2) கூறுகிறது.

அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள்  அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கமுடியாது. அவர்களின் அமைச்சரவைப் பத்திரங்களை ஜனாதிபதியினாலேயே சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று பொதுநிருவாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார். இந்த ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்களே அவற்றின் கணக்குவைப்பு அதிகாரிகளாக செயற்படவேண்டிய பொறுப்பைக்கொண்டவர்கள் என்கின்ற அதேவேளை, ஜனாதிபதியின் செயலாளரே பிரதான கணக்குவைப்பு அதிகாரியாவார் என்றும் அவர் கூறினார்.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள்  ஜனாதிபதியின் கீழேயே செயற்படவேண்டியிருக்கும். ஏனென்றால் அரசியலமைப்பின் உறுப்புரை 44 (3) யின் இரண்டாவது பந்தியில் குறித்துரைக்கப்பட்டிருப்பதன் பிரகாரம் அமைச்சர்களுக்கான பொறுப்புக்களிலும்  கடமைகளிலும் எந்த மாற்றத்தையும் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. 

இந்த அமைச்சர்களின் பொறுப்பில் வருகின்ற விவகாரங்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படுகின்றபோது இவர்களின் சார்பிலான பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படுகி்றபோது அமைச்சரவைக்கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் கூட அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்கள் என்றே வகைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், ஜனாதிபதியின் ஊடாகக்கூட அமைச்சரவைக்குப் பத்திரங்களைச் சமர்ப்பிக்கமுடியாது.