அங்குராங்கெத்த மற்றும் வலப்பன ஆகிய பகுதிகளுக்கான சுகாதார அத்தியகட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலான காலப்பகுதிகளில் 35 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஹரகஸ்கட ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் கோசல சோமாரத்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

“விசேடமாக கண்டமாலை உள்ளவர்களுக்கு அதிகளவு இவ்வாறு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எமக்குக் கிடைத்த தகவலின் படி 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடையிலான பெண்களுக்கே இவ்வாறான நோய் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான புற்றுநோய் எவ்வாறான காரணங்களினால் ஏற்படுகின்றது என்பதை எம்மால் கூற முடியவில்லை. அதிகளவானோர் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் போது விவசாயத்திற்கு உபயோகிக்கும் கிருமிநாசினிகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

இருந்த போதும் இப்பிரதேசங்களில் வாழும் அதிகளவானோர் இந் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். எம்மால் முடிந்தளவு வைத்தியம் செய்ய முடியும். மேலும் இந்நோய் பரவாமல் இருப்பதற்கு அங்குள்ள அனைத்துக் கிராம மக்களும் கிருமி நாசினி அடங்காத உணவுப் பொருட்களை அதாவது பலா, மரவள்ளி, ஈரப்பலா மற்றும் பழ வகைகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்நோய் பரவாமல் இருக்க முடிந்தவரை கிருமி நாசினிகள் இல்லாத பொருட்களை உணவாக உட்கொண்டால் எதிர்கால சந்ததியினர் இந்நோயிலிருந்து காக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான பொருட்களின் பாவனையை பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் அனைத்து மக்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்கது.