இலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் மலையகத்தின் மண் காணப்பட்டது.

இனிமேல் இந்த நாட்டில் எமக்கு வாழ உரிமை இல்லை என மண்னை எடுத்து சென்ற மக்களின் பரம்பரைக்கு இன்று 7 பேர்ச் காணி உறுதியுடன் தனி வீடு அமைத்து கொடுத்து நிரந்தர பிரஜையாக இந்த அரசாங்கம் உருவாகியுள்ளது என காணி மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் கையளிக்கும் நிகழ்வும், பயனாளிகளுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

150 வருடங்களுக்கு மேலாக வரலாறு கொண்ட இலங்கையின் தேயிலை தொழிலில் ஈடுப்பட்ட தோட்ட தொழிலாளர் மக்கள் இந்த மண்ணுக்கு கடன் இல்லாமல் வாழ்ந்த மக்களாக நாம் இவரகளை ஆதரிக்கின்றோம்.

அமைச்சர் திகாம்பரம் உங்களுக்கு 7 பேர்ச் நிலத்தில் வீடு அமைத்து கொடுக்கும் நேரத்தில் இந்த நிலத்திற்கான காணி உறுதிகளை அமைச்சர் என்ற வகையில் கொண்டு வந்து நான் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த பரம்பரையின் மூதாதையர்கள் இந்த குளிரான சூழலில் வெயிலுக்கும், மழைக்கும் அட்டை கடிக்கும் ஈடுகொடுத்து வாழ்ந்த இந்த பூமியை தங்க பூமியாக மாற்றியமைக்கு நாட்டுக்கு பாரிய அளவு வெளிநாட்டு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுத்துள்ள மக்களாக நாம் உங்களை கௌரவப்படுத்துகின்றோம்.

நமது அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் நிலத்தை உரிமையாக்கி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று இந்த மக்களுக்கு சொந்த காணிகளை உறுதியோடு வழங்கி வைக்கும் இன்றைய நாள் தோட்ட மக்கள் நிரந்தர பிரஜைகள் என்ற நாளை உருவாக்கியுள்ளனர். இந்த இடத்திற்கு நீங்களே சொந்தகாரர் என்ற உரிமை இன்று காணி உறுதி பத்திரத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

அதைபோல் நமது உறவுக்கு அண்மையில் உள்ள இந்திய அரசு வீடுகள் அமைக்கவும் உதவி செய்து வருவதற்கு நன்றி செலுகின்றோம். இந்த காணி உறுதியை அவசரம் ஒன்றுக்கு வங்கியிலும் வைத்து பணம் பெற முடியும். பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கவும் முடியும்.

குடும்பத்தோடு தனியாக வாழ இடம் குறைவு என்றால் மாடிகள் அமைத்து கொண்டும் அறைகளை விருத்தியாக்கி கொண்டும் வருமானத்திற்கு ஏதேனும் அமைத்து கொண்டும் வாழ முடியும்.

ஏனைய இன மக்களுடன் சரிசமமாக வாழ கூடிய உரிமை இந்த டயகம மக்களுக்கும் கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது என அவர் மேலும் தெரிவித்தார்.