(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இணைந்து இரகசியமாக மேற்கொள்ளும் தீர்மானங்களை செயற்படுத்த இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபகஷ் தெரிவித்தார்.

பெலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையின் புதிய கட்டட திறப்பு விழா இன்று இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் கல்விக்கு பாரியளவில் நிதி ஒதுக்குவதாக பிரசாரம் செய்துவருகின்றது. ஆனால் கடந்த மூன்று வருடங்களில் கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இது எதிர்காலத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதன் மூலம் கல்விக்கான ஒதுக்கீடுகளை குறைப்பதே இவர்களின் திட்டமாகும்

அத்துடன் விவசாய பயிர்களை அழித்துவரும் சேனா கம்பளி புழு தொடர்பில் அரசாங்கம் மெளனம் காத்து வருகின்றது. இது அரசாங்கத்தின் திட்டமா என்ற  சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.  வெளிநாடுகளில் இருந்து உணவுவகைகளை இறக்குமதிசெய்ய விவசாய செய்கைகளை அழிப்பதற்கான சதித்திட்டமா என்ற சந்தேகம் இருக்கின்றது என்றார்.