(ஆர்.யசி)

புதிய அரசியல் அமைப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித இரகசிய உடன்படிக்கையையும் ஐக்கிய தேசிய கட்சி செய்துகொள்ளவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு நேர்மையான வழியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அரசியல் அமைப்பினை பயன்படுத்துகின்றோம் என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இரகசிய உடன்படிக்கை என்ற கட்டுக்கதை கட்டி ஆட்சியை வீழ்த்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு என்ற பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இரகசிய உடன்படிக்கைகளை செய்து வருவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டினை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மக்களின் அபிமானத்தை பெற்றதும்  தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சியாகும். அவர்கள் ஆயுத குழுக்களோ அல்லது சட்ட விரோத அமைப்பினரோ அல்ல. இந்த நாட்டில் ஒரு தொகுதி  மக்களின் பிரதிநிதிகள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.