கர்ப்பகாலத்தில் பெண்ணின் குருதியமுக்கம் அதிகரித்தால் ஏற்படும் பாதிப்புகள்

Published By: Raam

05 Apr, 2016 | 07:59 AM
image

கர்ப்பகாலப் பராமரிப்புகள் ஒழுங்காக ஆரம்பகாலத்தில் மாதம் ஒருமுறையும் பிந்திய காலத்தில் இருவாரங்களுக்கு ஒருமுறையும் மேற்கொள்ளப்படும். இதன்போது வைத்தியர் உங்களது குருதியமுக்கத்தை (Blood Pressure) அளப்பர். அத்துடன் சிறுநீர்ப் பரிசோதனையில் புரதம் உள்ள தன்மை அறியப்படும். இவ்வாறு ஒழுங்காக குருதியமுக்கத்தையும் சிறுநீரையும் பரிசோதிக்கும்போது இதற்கான ஆதாரங்களைக் கண்டறிய முடியும்.

கர்ப்பகாலத்தில் உயர்குருதியமுக்கம் ஏற்படும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள்

கர்ப்பகாலத்திலேற்படும் குருதியமுக்க அதிகரிப்பால் தாய்க்கும் சிசுவுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

தாய்க்கு ஏற்படும் பாதிப்புகளாவன

தலைவலி, வாந்தி, கண்பார்வை கலங்கல, குருதியமுக்க அதிகரிப்புடன் சிலரில் சிறுநீருடன் புரதமும் வெளியேறத்தொடங்கும். இந்நிலை சற்றுத்தீவிரமான நிலையாகக் கருதப்படும். (Pre eclampsia)  வலிப்பு ஆகியனவாகும்.

சிசுவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளாவன

சிசு வளர்ச்சி குறைதல், சிசுவின் துடிப்புக் குறைவடைதல், சிசுவின் எடைகுறைதல், சிசுவுடன் வளரும் நச்சுக்குடலில் குருதிப் பெருக்கு ஏற்படல் (Placental Abruption) மற்றும் சிசு மரணங்கள் ஆகும்.

கர்ப்பகாலத்தில் உயர்குருதியமுக்கம் ஏற்படுவதற்கான காரணம்

கர்ப்பிணி ஒருவரின் நச்சுக்குடல் (placenta) சுரக்கும் பதார்த்தங்கள் பெண்ணின் குருதியில் கலக்கும்போது அவை குருதிக்குழாய்களை சுருங்கச் செய்யும் போது இந்நிலை ஏற்படும் எனவேதான் பிரசவத்தின் பின் நச்சுக்குடலும் வெளியேறுவதால் குருதியமுக்கம் சாதாரண அளவுக்குத் திரும்புகிறது.

இந்நிலை கூடுதலாக ஏற்படும் பெண்களின் வகைகள்

* 35 வயதுக்கு மேல் கர்ப்பந்தரித்தவர்கள்.

* பரம்பரையில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டவர்கள், அதாவது நெருங்கிய இரத்த உறவினர்களில் இவ்வாறான குருதியமுக்க அதிகரிப்பு ஏற்பட்டவர்கள்.

* உடற்பருமன் அதிகமாக உள்ள பெண்கள்

* கடந்த கர்ப்பகாலத்தில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்ட பெண்கள்.

* முதல் தடவை கர்ப்பந்தரிக்கும் பெண்களில் குருதியமுக்கம் அதிகரிப்பிற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.

* கர்ப்பந்தரிக்கும் போது சிறுநீரக நோயுடையவர்கள்.

* கர்ப்பந்தரிக்கும் போது நீரிழிவு நோயுடையவர்கள்.

மேற்குறிப்பிட்ட பெண்களில் கர்ப்பகாலக் குருதியமுக்க அதிகரிப்பு ஏற்படுகின்றது.

கர்ப்பகாலத்தில் குருதியமுக்கம் அதிகரிப்பதனை கவனிக்காது விடும் போது தாயில் ஏற்படும் விளைவுகள்

சிறுநீரக செயற்பாடு குறைதல், சிறுநீர் வெளியேற்றம் குறைதல், மூளையில் குருதிக்கசிவு, பாரிசவாதம், ஈரலில் ஏற்படும் குருதிக்கசிவு, ஈரல் தொழிற்பாடுகள் பாதிப்படைந்து கண்கள் மஞ்சள் ஆகுதல், கால்கள் முகம், கைகள் வீங்குதல், குருதி உறையாத தன்மைக்கு மாறுதல், நுரையீரலில் நீர் தேங்குதல் என பல வழிகளில் சிக்கல்கள் ஏற்பட்டு இறுதியில் தொடர்ச்சியான வலிப்புகள் மயக்கம் ஏற்பட்டு மரணங்கள் கூட ஏற்படும் நிலைகள் கூட உள்ளன.

கர்ப்பகால உயர்குருதியமுக்கத்திற்கு மேற்கொள்ளும் சிகிச்சை

கர்ப்பகாலக் குருதியமுக்க அதிகரிப்பு எந்தளவு தீவிரமாக உள்ளது என்பதனைப் பொறுத்து சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதாவது குருதியமுக்க உயர்வை கண்டறிந்தால் நாம் மேற்கொண்டு இதனை ஒழுங்காகப் பார்க்க வேண்டும்.

அத்துடன் சிறுநீர், இரத்தப்பரிசோதனை என்பன மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் தாக்கத்தையும் உக்கிரத்தையும் அறிய முடியும். அத்துடன் ஸ்கான் பரிசோதனை மேற்கொண்டு சிசுவின் வளர்ச்சி தொடர்பாக அறியவேண்டும். அத்துடன் தேவை ஏற்படின் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ கண்காணிப்பில் ஓய்வாக இருக்க ஆலோசனை வழங்கப்படும். அத்துடன் குருதியமுக்கத்தை கட்டுப்படுத்த மாத்திரைகளையும் வழங்கவேண்டும். குறைமாதமாக இருப்பின் சிசுவின் சுவாச தொகுதியில் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் ஊசிகள் வழங்கபஙபடல் வேண்டும். இவ்வாறு சிலவாரங்கள்  சிகிச்சை வழங்கப்பட்டாலும் பிரசவத்தை சற்று முற்கூட்டியே மேற்கொள்ளும் போதே இதற்கான தீர்வு கிடைக்கின்றது. 

அதாவது இறுதி நேரம் வரை காத்திருக்காமல் நாம் பிரசவத்தை மேற்கொள்வோம்.

இது சாதாரண சுகப்பிரசவமாகவோ அல்லது சிசேரியன் பிரசவமாகவோ மேற்கொள்ளப்படும். பிரசவத்தின் பின் குருதியமுக்கம் குறைவடைந்து வழமைக்குத் திரும்புகின்றது.

உயர்குருதியமுக்கம் ஏற்படும்போது தென்படும் நோய் அறிகுறிகள்

உயர்குருதியமுக்கம் கர்ப்பகாலத்தில் உள்ளபோது சிலவேளைகளில் நோய் அறிகுறிகள் இருப்பதில்லை. ஆனால் தலைவலி, வாந்தி, கைகால்கள் கூடுதலாக வீங்குதல், கண்பார்வையில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீர்குறைவாக வெளியேறுதல் போன்றன இருக்கலாம். இவை காணப்படின் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

எனவே கர்ப்பகாலத்தில் ஏற்படும் குருதியமுக்க அதிகரிப்பை கவனத்திலெடுத்து சரியான விதத்தில் கையாளும் போது இதன் தாக்கங்களிலிருந்து விடுபடலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18
news-image

கண் புரை சத்திர சிகிச்சைக்கு பின்னரான...

2025-03-10 16:47:15
news-image

ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனும் பனிக்குட நீர் குறைப்பாடு...

2025-03-06 15:49:10