(ஆர்.யசி)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு அணி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய முயற்சித்து வருவதாகவும், அவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு எதிராக ஜனாதிபதி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் விலை போன ஒரு அணியே இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. கடந்த நல்லாட்சியில் அமைச்சுக்களை வைத்துகொண்டு சுகபோக வாழ்க்கையை அனுபவித்த ஒரு அணியே இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. இவர்களுக்கு அமைச்சு பதவி இல்லாது, சலுகைகள் இல்லாது வாழ முடியாது உள்ளது. 

ஆகவே தான் இவர்கள் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அணியில் இணைந்துகொள்ள முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு சர்வதேச புலம்பெயர் அமைப்புகளின் பணம் கிடைக்கவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அதன் தலைமைத்துவமும் தெரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் நோக்கம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்துவதாகும். அதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சி சரியாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.