மழை விட்டும் தூவானம் விட வில்லை என்பது போன்று சபரிமலையில் கடந்த 14 ஆம் திகதி மகரஜோதி பெருவிழா நிறைவடைந்து பருவகாலம் முடிந்தும் இத்தலத்திற்கு அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடாது என்ற சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.. 

இந்தியாவுக்கு அருகில் உள்ள நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையிலிருந்தே பெருந்தொகையான பக்தர்கள் சபரிமலைக்குச் செல்கின்றனர்.

இவர்களில் எத்தனைப்பேர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் அதன் பின்னர் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் செவிமடுத்திருப்பார்கள் என்பதும் கேள்விக்குறியே. சபரிமலைக்கு 10 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் வழிபாடு செய்ய அனுமதியில்லை என்ற தடையானது இந்திய அரசியல் யாப்பிற்கு ஏற்புடையது அல்ல என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து உருவான சர்ச்சைகள்,கலவரங்கள், கருத்துமோதல்கள் இம்முறை சபரிமலை பருவகாலம் முழுதும் எதிரொலித்து வந்தன.

சமூக வலைதளங்களில் இது ஒரு விவாதப்பொருளாகியது. பெண்ணுரிமை அமைப்புகள் பெண்ணியவாதிகள் இதை விவாதப்பொருளாக்கி ஊடகங்களை ஆக்கிரமித்தனர். ஊடகங்களும் அதை தமக்கேற்றாற்போல் பயன்படுத்திக்கொண்டன. சபரிமலைக்குச்செல்லும் ஆண் பக்தர்களை நோக்கி கேள்விக்கணைகள் பறந்தன. தீட்டு என்கின்றீர்களே உங்கள் தாயின் வயிற்றிலிருந்து தீட்டில்லாமலா நீங்கள் பிறந்தீர்கள் என்பதிலிருந்து உங்கள் மனைவி,சகோதரி ,மகள் எல்லோரையும் தீட்டு என்று ஒதுக்கி விட முடியுமா ?

 எல்லா வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்வதில் என்ன தடை உள்ளது என, ஏன் இந்த ஆண் பக்தர்கள் கேள்வி எழுப்புவதில்லை போன்ற குமுறல்கள் பெண்ணியல்வாதிகளிடமிருந்து கிளம்பின. இதற்கு சரியான பதிலை எந்த ஆண்களும் அல்லது ஐயப்ப ஆண் பக்தர்களும் கூறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

ஏனென்றால் அவர்களில் பலருக்கு பெண்கள் தரிசிக்கும் இந்தியாவின் ஐயப்ப ஆலயங்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சரி அந்த ஆலயங்கள் என்ன ? அங்கு பெண்கள் செல்வதற்கு ஏன் தடையில்லை என்பது குறித்து பார்க்க வேண்டியுள்ளது. ஆறு ஐயப்பன் ஆலயங்கள் கேரளாவில் ஐயப்பனுக்கு ஆறு ஆலயங்கள் உள்ளன. அவை ஆரியங்காவு ( நெல்லை வட்டம்   செங்கோட்டையில்  இருந்து சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில்,  கேரள  மாநிலத்தில் அமைந்துள்ளது) 

அச்சன்கோவில் செங்கோட்டையில் இருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் கேரள மாநிலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது) , குளத்துப்புழா ( செங்கோட்டையில் இருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது) ,எருமேலி(கோட்டயம் மாவட்டம்) , பந்தளம் (ஐயப்பன் வளர்ந்த இடம். -திருவனந்தபுரத்தையும் கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது) , சபரிமலை ஆகியன. இதில் சபரிமலையே பிரசித்த பெற்றதும் பிரதானமானதுமாகும். 

எனினும் இந்த ஆறு ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டாலே ஐயப்பன் அருள் பூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மட்டுமன்றி இந்த ஆறு ஆலயங்களிலும் சபரிமலை தவிர்ந்த ஏனைய ஐந்து ஆலயங்களுக்கும் எல்லா வயது பெண்களும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படியானால் சபரிமலைக்கு மட்டும் ஏன் அவ்வாறு இல்லை என்பதை ஆன்மிக ரீதியாக விரிவாக விளக்குபவர்கள் எவரும் இல்லை. எனினும் அது குறித்த விளக்கங்களை சமூக ஊடகங்களில் சில இளைஞர்களே முன்வைத்திருந்தனர்.

ஐயப்பனின் திருக்கோலங்கள்

ஐயப்பன் ஆலயங்களில் ஐயப்பனின் திருவுருவகோலங்களை வைத்தே ஆண் பெண் வழிபாடு தீர்மானிக்கப்படுகின்றது என்பது முற்போக்கு எண்ணங்கொண்ட சைவ சமய இளைஞர்களின் வாதமாக இருக்கின்றது. அதை அவர்கள் சைவ சமய வழிபாடுகளை அடிப்படையாகக்கொண்டு விளக்குகின்றனர். உதாரணமாக ஆரியங்காவு ஐயப்பன் ஆலயத்தில் அரசராக காட்சித் தருகிறார் ஐய்யப்பன். 

அதே போன்று அச்சன் கோவிலில் வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், வாளும் ஏந்தி தர்மசாஸ்த்தாவாக காட்சித் தருகிறார் ஐய்யப்பன். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவதுபோன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐய்யப்பனை “கல்யாண சாஸ்தா” என்று அழைக்கிறார்கள்.ஏனெனில் இது அவரது திருமண கோலமாகும். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள். குளத்துப்புழாவில் அய்யப்பன் குழந்தையாக இருப்பதால் “பால சாஸ்தா” என்று அழைக்கப்படுகிறார்.எருமேலி ஆலயத்தில் வேட்டைக்குச்செல்லும் வகையில் கைகளில் வில், அம்பு ஆகியவற்றை ஏந்திய திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். தான் ஓடித்திரிந்து வளர்ந்த பந்தளத்தில் மணிகண்டனாக புலியுடன் நின்று காட்சி தருகிறார் ஐயப்பன். இந்த ஐந்து ஆலயங்களுக்கும் எவ்வித வயது வேறுபாடின்றி ஆண்களும் பெண்களும் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.

பிரமச்சரிய தவநிலை

ஆனால் சபரிமலையில் மட்டுமே ஐயப்பன் பிரமச்சரிய தவ நிலையில் யோக சின் முத்திரை தாங்கி காட்சி தருகிறார். ஆகவே இங்கு செல்லும் பக்தர்களும் 41 நாள் கடும் விரதம் அனுஷ்டித்து கிட்டத்தட்ட பிரமச்சரிய நிலையிலேயே செல்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில் ஐயப்பன் பக்தர்கள் பெண்களிடத்தே விலகியிருக்கின்றனர். அதாவது பிரமச்சரியம் என்பதன் அர்த்தத்துடன் அவர்கள் அந்த நாட்களை கழிக்கின்றனர். இது கிட்டத்தட்ட ஐயப்பனின் நிலை. ஆகவே தான் ஐயப்ப பக்தர்களை அனைவரும் சுவாமி என்றழைக்கின்றனர். எல்லா சமயங்களிலும் பிரமச்சரியம் என்ற அம்சம் உள்ளது. பிரமச்சரிய விரதங்களில் பிரதானமானது எதிர்பாலினத்தரிடமிருந்து விலகியிருத்தல் . 

அதாவது ஆண்கள் பெண்களிடத்தே சகல விடயங்களிலும் விலகியிருக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் கூறுவது என்னவெனில் சபரிமலையில் ஐயப்பன் பிரமச்சரிய நிலையில் பெண்களிடத்தே விலகியிருக்கிறார். மட்டுமன்றி சைவநெறியில் ஆண்கள் மட்டும் பங்குகொள்ளும் அல்லது ஈடுபடும் பூஜைகள்,வழிபாடுகள் இருப்பது போன்று பெண்கள் மட்டும் பங்குகொள்ளும் பூஜைகளும் இருக்கின்றன. உதாரணமாக சுமங்கலி பூஜைகள், (விளக்குப்பூஜை) ஆகியவற்றை குறிப்பிடலாம். இதில் ஆண்கள் பங்குகொள்வதில்லை.

இதையே சபரிமலை வழிபாட்டிலும் பக்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திருமணம் முடித்த ஆண்கள் 41 நாட்கள் பிரமச்சரிய நிலையில் இருக்கின்றனர். வீட்டிற்குச் செல்வதில்லை. எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாதிருக்கின்றனர். ஆகவே இது ஆண்கள் கூடுதலாக செய்யப்படும் வழிபாடாகி விட்டது. ஆனால் அப்படி ஒரு விரதத்தை 40 நாட்கள் வயது வந்த பெண்கள் இருக்க முடியுமா என்பதே இங்கு அவர்களிடமிருந்து எழுந்திருக்கும் கேள்வி. 

இவ்வயது பெண்களுக்கு எழும் மாதாந்த பிரச்சினையே இங்கு முன்வைக்கப்படும் தீட்டு என்ற விவகாரமாகும். ஆனால் இந்த பிரமச்சரிய விரதத்தின் மகிமை ,புனிதம் ஆகியவற்றை மதித்தும் தெரிந்தும் வைத்துள்ள சைவ சமய பெண்கள் அதிலிருந்து விலகி ஏனைய ஐந்து ஐயப்பன் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்றும்படி ஐயப்பனை வயது பெண்கள் தரிசிக்கவே கூடாது என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை.

அரசியலாக்கப்பட்டது எப்படி?

ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே இதை பல தரப்பிலிருந்தும் அரசியல்மயமாக்கும் நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்பட்டன. உண்மையில் சபரிமலைக்கு வலுக்கட்டாயமாகச்சென்ற பெண்கள் அனைவருமே சமய விழுமியங்களை கடைப்பிடிப்பவர்கள் இல்லை. அவர்கள் இடது சாரிகள்,மத நம்பிக்கையற்றவர்கள் பெண்ணிய உரிமை பற்றி பேசுபவர்கள் வீம்புக்காகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் என ஐயப்பன் பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். 

பிரபலம் தேடுவதற்கும் அரசியல் நோக்கங்களுக்குமே இவ்வாறு பெண்கள் இங்கு வருவதை விரும்புகின்றனர். சில வேற்று மதத்து பெண்கள் வேண்டுமென்றே இங்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர். அவர்களின் பின்புலத்தை தேடிப்பார்த்தால் இவர்கள் எந்த ஆலயங்களுக்கும் செல்லாதவர்களாகவே இருக்கின்றனர் என்கின்றனர் பூசகர்கள் .இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை எவ்விதத்திலும் சவாலுக்குட்படுத்த முடியாத நிலை சபரிமலை தேவஸ்தானத்துக்கு உள்ளது. 

பெண்கள் வந்து சென்ற பிறகு நடையை சாத்தி பரிகார பூஜை செய்த பூசகரிடம் தேவஸ்தானம் விளக்கம் கேட்டுள்ளது. எது எப்படியானாலும் உலகின் மிகப்பெரிய –ஜனநாயக நாடான இந்தியாவில் சட்டமா? சமயமா ?என்ற கோஷம் ஐயப்பன் விவகாரத்தில் ஓங்கி ஒலித்து வருகிறது. அயோத்தி விவகாரத்தில் இராமரை வைத்து செய்யப்படும் அரசியலைப்போன்று தற்போது ஐயப்பனும் இதில் இணைந்து கொண்டுள்ளார் என்றே கூற வேண்டியுள்ளது.

சிவலிங்கம் சிவகுமாரன்