நேரில் சந்திக்க வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க  நிராகரித்துள்ளார்

சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய பேட்டியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லசந்தவிக்கிரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்ற உண்மையை லசந்தவின் மகள் அறிய விரும்புகின்றார் என்றால் அவர் அவரை இலங்கை வந்து என்னை சந்திக்க சொல்லுங்கள் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

நான் அவரிற்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்லுவேன் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து சண்டே ஒப்சேவரிற்கு கருத்து தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க  எனது தந்தையை கொலை செய்தவர்கள் யார் என்ற உண்மை தனக்கு தெரிந்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்  அவர் சொல்வது உண்மையாகயிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்

தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் அகிம்சா விக்கிரமதுங்க நேரில் சந்திப்பதற்கு கோத்தபாய ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

நான் பொலிஸ் இல்லை, கோத்தாபய ராஜபக்ச சிஐடியினரிற்கு தனக்கு தெரிந்ததை தெரிவிக்கவேண்டும் என  அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்

சந்தேகநபர்களிற்கு இராஜதந்திர பதவிகளை வழங்கி எனது தந்தை கொலை செய்யப்பட்டமை குறித்து தான் எவ்வளவு தூரம் மகிழ்ச்சியடைந்துள்ளார் என்பதை உலகிற்கு காண்பிப்பதற்கு பதில் ஆரம்பத்திலேயே அவர் இதனை தெரிவித்திருக்கவேண்டும் என அகிம்சா குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தனது பேட்டியில் லசந்த விக்கிரமதுங்கவின் குடும்பத்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர்  அவரது பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.

லசந்தவின் சடலம் மாத்திரம் இங்குள்ளது அவர்கள் அனைவருக்கும் உண்மையான கொலைகாரன் யார் என்பது நன்கு தெரியும் அவர்கள் எவரும் விசாரணைகள் உரிய விதத்தில் இடம்பெறுவதை விரும்பவில்லை எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள அகிம்சா விக்கிரதுங்க இவர்கள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதன் காரணமாகவே வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றனர் என  குறிப்பிட்டுள்ளார்.

நானும் எனது சகோதரர்களும் சிறுவர்களாகயிருந்த போது  நுகேகொடையில் உள்ள எங்கள் வீட்டின் மீது துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றது  தந்தையை  இலக்குவைத்து  இந்த தாக்குதல் இடம்பெற்றது  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் சிஐடியினரை நம்புகின்றேன்,அவர்கள் உண்மையை கண்டுபிடித்து முழுச்சதியையும் அம்பலப்படுத்துவார்கள், அவ்வாறு நிகழும்போது கோத்தபாய ராஜபக்ச சொல்வதை செவிமடுப்பதற்கு அவரது சொந்த சகோதரர்களும் ஆர்வமாகயிருப்பார்கள் எனவும் அகிம்சா தெரிவித்துள்ளார்.