ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படவேண்டும் என்று ஆளும் ஐக்கிய தேசிய கட்சியும் மாகாணசபை தேர்தல்களும் பாராளுமன்ற தேர்தலுமே முதலில் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தரப்பும்  வலியுறுத்திக்கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருட இறுதிக்கு முன்னதாக நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதி தேர்தலை அதற்கு முனகூட்டியே நடத்துவதற்கு சிந்திப்பதாக சில அரசியல் வட்டாரங்களால் பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு சிறிசேன துணிச்சல்கொள்ளமாட்டார் என்று அவதானிகள் அபிப்பிராயம் வெளியிட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி சிறிசேனவின் 5 வருட பதவிக்காலத்தில் 4 வருடங்கள் கடந்துவிட்டநிலையில் ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை. ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன / ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணியின் பொதுவேட்பாளராக அவர் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருக்குமேயானால் மாத்திரமே முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்வருவார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஜனாதிபதி சிறிசேன ஆட்சியதிகாரத்தில் இருக்கும்வரைதான் அவரின் பக்கத்தில் இருக்க மகிந்த ராஜபக்ச விரும்புவார். ஏனென்றால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு தொல்லைகளைக் கொடுப்பது உட்பட  தங்களுக்கு அனுகூலமாக அமையக்கூடிய  பல வேலைகளை ஜனாதிபதியைக்கொண்டு செய்விக்கலாம் என்று ராஜபக்ச நம்புகிறார். சிறிசேன அதிகாரத்தில் இருக்கும்வரை அவரைப் பகைத்துக்கொள்ளவும் ராஜபக்ச விரும்பமாட்டார் என்பதிலும் சந்தேகமில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டாகச் சேர்ந்து முதலில் மாகாணசபைத் தேர்தலுக்கு அல்லது பாராளுன்றத் தேர்தலுக்கு போவதையே ராஜபக்ச விரும்புவார். 

அதேவேளை, தற்போதைய தருணத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக ஜனாதிபதி சிறிசேனவை ஆதரிக்க முன்னாள் ஜனாதிபதி முன்வருவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது.

இந்த விடயத்தில் ராஜபக்சவின் தயக்கத்துக்கு அல்லது தடுமாற்றத்துக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக ராஜபக்சவின் அரசியல் படிமத்துக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது. அவரின் செல்வாக்கு பெருமளவுக்கு குறைந்துவிட்டதாகக் கூறமுடியாவிட்டாலும் வாக்கு ஆதரவு ஓரளவுக்கு  பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது என்பது உண்மையே. தனது மதிப்பை மீண்டும் சீர்செய்துகொள்வதற்கு அவருக்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது.

அதேவேளை, ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமுடியாதென்பதால் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் முக்கிய ஆளுமையாக அவர் முன்னிலைப்படுத்தப்படப்போவதில்லை. தான் ஒரு முக்கிய ஆளுமையாக விளங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய தேர்தலில் மாத்திரமே அவர் இப்போது அக்கறை காட்டுகிறார். அது ஒன்றில் மாகாணசபைத் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தலேயாகும். அதனால் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலொன்றை நடத்துவதற்கு சிறிசேன மனங்கொள்ளக்கூடிய அரசியல் சூழல் உருவாகுவதற்கு முன்னாள் ஜனாதிபதி துணைபோகமாட்டார் என்று இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் கருத்துவெளியிட்டிருக்கிறார்.