இதயம் தொடர்ந்து இயங்குவதற்கு இதய வால்வுகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். 

இதன் செயல்பாடு குறையும் போது மருத்துவ நிபுணர்கள் அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி செயற்கையான இதய வால்வுகளை பொருத்திக் கொள்ளும் படி வலியுறுத்துவார்கள். 

இந்நிலையில் இதய வால்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்து இதய வால்வுகளை மீண்டும் பொருத்துவது என்பது சவாலானது. 

இதற்கு நோயாளியின் ஒத்துழைப்பும் இத்தகைய சத்திர சிகிச்சையை தாங்கும் அளவிற்கான உடல் சக்தியைக் கொண்டிருக்கவேண்டியதாகிறது. 

இத்தகைய சத்திர சிகிச்சையை உடலில் உள்ள வேறு சில ஆரோக்கிய குறைபாடுகளாலும் முதுமையினாலும் சிலர் செய்து கொள்ள முடிவதில்லை. இதற்கு தற்போது ஒரு மாற்று சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

அதாவது ட்ரான்ஸ்அயோட்ரிக் வால்வு இம்ப்ளாண்டேசன் (Transaortic Valve Implantation) எனப்படும் செயற்கை இதய வால்வுகளை பாதிக்கப்பட்ட பகுதிக்குள் சத்திர சிகிச்சையற்ற முறையில் பொருத்துவது என்ற சிகிச்சை  அறிமுகமாகியிருக்கிறது. 

இதன் போது நோயாளியின் கால் தொடை பகுதியிலிருந்து செயற்கையான வால்வுகள் நுண்துளையின் மூலம் இதயப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட இதய வால்வுகளுக்கு பதிலாக  இவை பொருத்தப்படுகிறது. 

கிட்டத்தட்ட இதய பாதிப்பிற்கான ஓஞ்சியோ பரிசோதனை போன்ற  மருத்துவ நடைமுறைகள் இவ்வகையினதான சிகிச்சையின் போதும் மேற்கொள்ளப்படுகிறது.இத்தகைய சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் செயற்கை வால்வுகளின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் பதிமூன்று இலட்சமாக இருக்கிறது. 

இதனை வெற்றிக்கரமாக மேற்கொள்ளும் மருத்துவ நிபுணர்கள் சென்னையில் இருக்கிறார்கள். அதற்காக தற்போது உலகின் பல நாடுகளிலிருந்து இத்தகைய சத்திர சிகிச்சையற்ற முறையில் ட்ரான்ஸ்அயோட்ரிக் வால்வு இம்ப்ளாண்டேசன் என்ற சிகிச்சையை இந்தியாவில் மேற்கொள்கிறார்கள்.