வவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ்ஸினை எட்டாம் கட்டை பகுதியில் வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸினர் வழிமறித்து தமது நேரத்தில் நீங்கள் செல்வதாக தெரிவித்து ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போது இ.போ.ச. நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 31 வயதுடைய பஸ் நடத்துனர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் குறித்த தனியார் பஸ்ஸின் நடத்துனர், சாரதியினை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.