ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடையச் செய்வதற்கான தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த செயற்திட்டம் கைச்சாத்திடப்பட்டதுடன், இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றும் இலக்கை அடைந்துகொள்வதும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களை குறைப்பதும் இதன் நோக்கமாகும்.

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்று (18.01.2019) முற்பகல் பிலிப்பைன்ஸ் நாட்டின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இங்கு ஜனாதிபதியினதும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மெதிவ் மொரெல் ^Dr. Matthew Morell) இனதும் முன்னிலையில் அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளரும் இச்செயற்திட்டத்தில் கைச்சாத்திட்டனர்.

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்ற ஜனாதிபதியை அங்கு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இலங்கை மாணவர்கள் இருவர் வரவேற்றனர்.

நிறுவன வளாகத்தை ஜனாதிபதி சுற்றிப் பார்வையிட்டார். சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரும் நெல் மரபணு வங்கியாகும். உலகின் பல்வேறு நாடுகளின் அரிசி வகைகள் எதிர்காலத்திற்காக அங்கு களஞ்சியப்படுத்தப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி நிறுவனம் வரட்சி, வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களை தாங்கக்கூடிய நெல் வகை உற்பத்திக்காக அனைத்து நாடுகளுக்கும் மரபணுக்களை வழங்குகின்றது. நாளுக்கு நாள் வெப்பமாகி வரும் உலகில் நெல் வகைகளை களஞ்சியப்படுத்தல் மற்றும் அதிகரித்துவரும் பூகோள வெப்பமயமாதலுக்கு பொருத்தமான நெல் வகைகளை உற்பத்தி செய்தல் இதன் பணிகளாகும்.

வரட்சி மற்றும் வெள்ள நிலைமைகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய வகையில் நெல் பயிரிடுதல் மற்றும் பல்வேறு சூழலில் விதை நெல்லை நடுதல் தொடர்பான விளக்கங்களையும் ஜனாதிபதி செவிமடுத்தார்.

மேலும் விதை நெல் முகாமைத்துவம் தொடர்பான அறிமுகம் ஒன்றும் ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டதுடன், இலங்கைக்கென்றே தனித்துவமான விதை நெல் வகைகளையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார். டோனர் தொழில்நுட்பத்தின் மூலம் விதைகள் நடும் முறை பற்றியும் ஜனாதிபதிக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் மற்றுமொரு முக்கியமான நிகழ்வொன்றும் இதன்போது இடம்பெற்றது. விவசாயத்துறைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நினைவுப் பலகையை ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மெதிவ் மொரெல் ^Dr. Matthew Morell) ஐ ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் விவசாயத்துறை மீதான ஈடுபாட்டினை பணிப்பாளர் நாயகம் பெரிதும் பாராட்டியதுடன், அனைத்து அரச தலைவர்களும் விவசாயத்துறை தொடர்பில் இத்தகைய தெளிவான தொலைநோக்குடனும், ஈடுபாட்டுடனும் செயற்பட்டால் விவசாயத்துறையில் புதியதோர் புரட்சியை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ள முடியுமென்று அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றத்தின் காரணமாக இலங்கை நெல் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறைப்பதற்கும் தரத்தை மேம்படுத்துவதற்கும் உலக நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றியும் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதிக்கு விளக்கினார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

 காலநிலை மாற்றங்களுக்கு முகங்கொடுத்து இலங்கையை அரிசியில் தன்னிறைவு அடைந்த தேசமாக மாற்றுவதே தனது எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்டார்.

பிரதியமைச்சராகவும், அமைச்சராகவும் தான் மூன்று முறை சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகைதந்திருந்தமையை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இன்று ஜனாதிபதியாக நான்காவது தடவை இங்கு வருகைதரக் கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்ததுடன், விவசாயத்தை நேசிக்கும் தலைவர் என்ற வகையில் தனக்கும் இந்த நிறுவனத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

இன்றைய தினம் இந்த நிறுவனத்தின் வளாகம் ஒன்றுக்கு தனது பெயரை வைத்தமைக்காக ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்தார்.

ஆசிய வலயத்தில் உள்ள நாடுகளிலும் உலகெங்கிலும் உள்ள மக்களை வறுமையிலிருந்து விடுவித்து விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுவரும் பணிகளை ஜனாதிபதி பாராட்டினார். இந்த விஜயத்தை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.