வவுனியா, நொச்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி மீது அதிபர் தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த மாணவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்றைய தினம்  பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த நிலையில் ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையால் ஓமந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலையில் வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவரின் பணத்தினை காணவில்லையென தெரிவித்து எனது பிள்ளையினை அதிபர் தனது அறையில் வைத்து தாக்கியுள்ளார். 

அதே பாடசாலையில் கல்வி பயிலும் எனது மகனை அழைத்து அவனிடம் பச்சை மட்டை வெட்டி வருமாறு கூறியதுடன், மிளகாயை எடுத்துக் கொண்டுவருமாறு கூறி அதனைப் பெற்று அதன் மூலம் எனது மகளை தாக்கியுள்ளார்.  

எனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. மனைவி இல்லாத நிலையில் எனது பிள்ளைகளை நான் கஷ்ப்பட்டே வளர்கிறேன். இந்த நிலையில் எனது மகள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ஊடகங்களும் சமூக அமைப்புக்களும் தான் எனது மகளுக்கு நீதியினை பெற்றுத்தரவேண்டுமென தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த தந்தையினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணைக்குழு இது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர். ஓமந்தைப் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.