தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்டுவருகின்ற பேச்சுவார்த்தைகளில் காணப்படுகின்ற முட்டுக்கட்டைநிலை தொடருமானால் சம்பள நிர்ணய சபையை அணுகுவதற்கு பிராந்திய தோட்டக் கம்பனிகள் தயாராகிவருவதாக அவற்றின் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை தெரிவித்திருக்கிறார்.

பெருந்தோட்டத்துறையின் மூன்று பிரதான தொழிற்சங்கங்களுக்கும் பிராந்திய தோட்டக் கம்பனிகளுக்கும் இடையே புதிய கூட்டு ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், ஐந்துமாத காலமாக உருப்படியான தீர்வுக்கான எந்த அறிகுறியுமின்றி முற்றுமுழுதான முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்கிறது.

பிராந்திய தோட்டக் கம்பனிகள் பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் அவற்றின் பங்குகள் விற்கப்படுகின்ற கம்பனிகள் என்பதால்  கூட்டு ஒப்பந்தம் அல்லது தேயிலை  மற்றும் றப்பர் தொழில்துறைக்கான சம்பள நிர்ணய சபையைத் தவிர வேறு எந்த அமைப்பினாலும் அவற்றின் மீது சம்பள ஏற்பாடுகளைத் திணிக்க முடியாது என்று தோட்டச் சேவைகள் குழுமத்தின் தலைவரான இராஜதுரை கூறியிருக்கிறார்.

சம்பளப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை அகற்றும் நோக்கிலான இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்தவாரம் தோட்டத் தொழிற்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தொழில் அமைச்சர் தயா கமகேயும் கலந்துகொண்ட அந்தப் பேச்சுவார்த்தையிலும் கூட இரு தரப்பினருக்கும் ஏற்புடைடயதான இணக்கப்பாடொன்றை எட்டமுடியாமல் போய்விட்டது.

உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு வசதியாக எந்தவொரு தரப்பினருமே தங்களால் விதிக்கப்பட்ட காலக்கெடுவில் இருந்து அல்லது நிலைப்பாடுகளில் இருந்து தளர்வைச் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டவில்லை என்பதால் முன்னேற்றம் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியையும் காணக்கூடியதாக இல்லை என்று பெருந்தோட்டத் தொழிற்துறை வட்டாரம் ஒன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தது.

இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சர் திசாநாயக்க தொழிற்சங்கங்களினால் கோரப்படுகின்ற 1000 ரூபா  சம்பளத்தைக் கொடுக்குமாறு தோட்டக்கம்பனிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால், பிராந்திய தோட்டக்கம்பனிகள் அதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டன. பதிலாக ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் மற்றம் அனுகூலங்கள் உட்பட 940 ரூபாவை தினச் சம்பளமாகக் கொடுக்க தங்களால் இயலும் என்று கம்பனிகள் கூறின.

     தோட்த்துறைத் தொழிற்சங்கங்களின் கோரிக்கையின் பிரகாரம் தினமொன்றுக்கு அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவை வழங்குவது என்பது தங்களுக்கு நிதி அடிப்படையில் கட்டுப்படியாகாத காரியம் என்றும் உற்பத்தித்திறனை அடிப்படையாகக்கொண்ட ஏற்பாடொன்றுக்கு தொழிலாளர்கள் இணங்க வேண்டும் என்றும் பிராந்திய தோட்டக் கம்பனிகள் கூறிக்கொண்டிருக்கின்றன.

     ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு நிலையம் என்ற கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட பிரதான தொழிற்சங்கங்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் என்ற தங்களின் கோரிக்கைக்கு மாற்றாக பிராந்திய தோட்டக் கம்பனிகளினால் முன்வைக்கப்படுகின்ற யோசனையை ஏற்றுக்கொள்வதற்கு உறுதியாக மறுத்தவண்ணம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.