பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவத தடை விதித்துள்ளமையினால் நினைவு நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என்று புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

நேற்று (புதன்கிழமை ) காலை 9.30 மணிக்கு கொழும்பில் உள்ள இரண்டாம் மாடிக்கு எங்களை அழைத்து பிற்பகல் 2.30 மணிவரை விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் கடந்த யூலை 5 கரும்புலி நாள் நெல்லியடியில் நினைவுகொள்ளப்பட்டது தொடர்பில் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நினைவு நிகழ்வை நடத்துவதற்கு உங்களுக்கு அனுமதியை தந்தது யார் என்று கேட்டு இனிமேல் இப்படிப்பட்ட விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளை நடத்தக் கூடாது என்று கூறினர்.

அதன்பின் அதற்கான உறுதிமொழியையும் எங்களிடம் இருந்து பத்திரமொன்றில் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டனர்.

இதன் அடிப்படையில் இனிமேல் நாங்கள் விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை மேற்கொள்ள முடியாத சூழல் எழுந்துள்ளதாக கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.