(ஆர்.விதுஷா)

கொள்ளுப்பிட்டி மற்றும்  வெலிகம ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள  இரண்டு புட் சிட்டி நிலையங்களில் இன்று காலை திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

 கொள்ளுப்பிட்டி, ஈ.ஆர்.ஏ. டிமெல் மாவத்தை  பகுதியில்   அமைந்துள்ள புட் சிட்டியில்  இன்று அதிகாலை  1.15 மணியளவில் திடீர்  தீப்பரவல்  ஏற்பட்டுள்ளது. 

அதனை தொடர்ந்து  விபத்து தொடர்பாக  கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய  தீயை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்புப்படையினர்  ஈடுபட்டனர். 

இந்த நிலையில் தீயணைப்பு பணியில்  ஈடுபட்ட  தீயணைப்பு வீரர்கள்  இருவருக்கு  தீக்காயங்கள்  ஏற்பட்டுள்ளதோடு அவர்களின் கண்களும் பாதிக்கப்பட்டுள்ளன.  

தீக்காயங்களுக்குள்ளான  தீயணைப்பு  வீரர்கள்  இருவரும் கொழும்பு  கண் வைத்தியசாலையில்  அனுமதிக்கபட்டுள்ளதுடன் , தொடர்ந்தும் சிகிச்சை  பெற்று வருவதாக கொள்ளுப்பிட்டி  பொலிசார் தெரிவித்தனர் .  

மேலும்  ,  வெலிகம  -  காலி வீதியில்  அமைந்துள்ள  புட் சிட்டி வர்த்தக நிலையத்தில்  ஏற்பட்ட   தீவிபத்தின் காரணமாக  வர்த்தக நிலையத்தின் சொத்துக்களுக்கு  பாரிய சேதம்  ஏற்பட்டுள்ளது.

 இன்று   அதிகாலை  5.50 மணியளவில்  ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக  வர்த்தக நிலையத்தின்  காசாளர்  பிரிவு உட்பட  அதன் அருகிலிருந்த ராக்கை என்பன முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன்,  உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையென  தெரியவந்துள்ளது.