இலங்கை நாடானது மதச்சார்பற்ற நாடாகவும், தமிழும், சிங்களமும், சமமாக அரச கரும மொழிகளாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கலாம் என்றும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். நீங்கள் வடக்கின் ஆளுனராக பதவி ஏற்றுக்கொண்ட நாளில் வடக்கில் தமிழும், சிங்களமும் சகல திணைக்களங்களிலும் சமாந்தரமாக அரச கரும மொழிகளாக பிரயோகிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபடப்போவதாக கூறியிருந்தீர்கள். அதை நாமும் வரவேற்கின்றோம் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில்  அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 

எமது மக்களின் கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், வடக்கு மாகாணத்தின் மீள் எழுச்சிக்காகவும், அபிவிருத்திக்காகவும், எமது இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்புக் கோரிக்கையை தீர்க்கவும் நீங்கள் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், தொடர்ந்தும் மக்களோடு வாழ்ந்துவருபவர்கள் என்றவகையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் பூரணமான ஒத்துழைப்பை தங்களுக்கு வழங்குவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றும் அந்தக் கடிதத்தில் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.