குளவிக்கொட்டுக்கு இலக்கான சுமார் 70 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குளவிக் கூடொன்று கலைந்து மாணவ, மாணவிகளை குளவிகள் தாக்கத் தொடங்கியதால் 70 பேர் தெமோதரை, பண்டாரவளை, பதுளை ஆகிய இடங்களின் அரசினர் வைத்தியசாலைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (17-01-2019 ) பள்ளக்கட்டுவை சுகதா கனிஸ்ட வித்தியாலய மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியின் போதே, மைதானத்திற்கு அருகேயுள்ள மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து, போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளையும் பார்வையாளர்களான மாணவ, மாணவிகளையும் தாக்கியுள்ளது. 

இவர்கள் உடனடியாக, அப் பகுதியிலுள்ள வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக ஏற்றிச் செல்லப்பட்டனர். 

அதையடுத்து, இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. பதுளை அரசினர் வைத்தியசாலையில் 16 மாணவ, மாணவிகளும் பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையில் 30 மாணவ, மாணவிகளும் தெமோதரை அரசினர் வைத்தியசாலையில, 24 மாணவ, மாணவிகளுமாக 70 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்ல பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 16 மாணவ மாணவிகளில் 3 பேர் ஆபத்தான நிலையிலுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.