‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘சிந்துபாத் ’என பெயரிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

விஜய் சேதுபதி கடந்த ஆண்டில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன், ஜுங்கா, இமைக்கா நொடிகள், செக்கச் சிவந்த வானம், 96 , சீதக்காதி என அதிகப் படங்களில் நடித்த நாயகன் என்ற சாதனை செய்திருக்கிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலும் பேட்ட படத்தில் நடித்திருக்கிறார்.அதைத்தொடர்ந்து, சீனு ராமசாமியின் இயக்கத்தில் ‘மாமனிதன் ’ என்ற படத்தில் நடித்த வருகிறார்.

இந்நிலையில் ‘சேதுபதி’ என்றபடத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் தயாரிப்பில் நடிக்கும் புதிய படத்திற்கு சிந்துபாத் என பெயரிடப்பட்டு , அதன் ஃபர்ஸ்ட்  லுக் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

குறித்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யூ அருண்குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார். ‘இறைவி ’படத்திற்கு பிறகு இவ்விருவரும் மீண்டும் ஜோடியாக நடித்திருக்கும் படம் இது.

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஷான் சுதர்சனுடன் எஸ். என். ராஜராஜன் இணைந்து தயாரித்திருக்கும் குறித்த படத்தை முன்னணி படத் தொகுப்பாளரான ரூபன் படத்தை தொகுத்திருக்கிறார்.

மலேசிய நாட்டின் பின்னணியில் நடைபெறும் இந்த ஆக்சன் எண்டர்டெயினர் படமான ‘சிந்துபாத்’ படத்தின் மோஷன் போஸ்டரும் டீஸரும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.