ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் எந்த அடிப்படையில் விலகுவது என்பது தொடர்பில் ஒன்றியத்துக்கும் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை ( பிரெக்சிட் ஒப்பந்தம்) பிரிட்டிஷ் பாராளுமன்றம் நிராகரித்ததை அடுத்து அவரது அரசாங்கம் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்பட்டிருக்கிறது.

பிரெக்சிட் ஒப்பந்தம் மீது பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரதமர் மேக்கு நவீன பிரிட்டனின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரிய கவிழ்ப்பு என்று வர்ணிக்கப்படக்கூடிய தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இவ்வருடம் மார்ச் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான அடிப்படைகளை நிபந்தனைகளை வரையறுக்கிறது இந்த ஒப்பந்தம். இதுதொடர்பில் பிரதமர் மே கடந்த நவம்பரில் ஒன்றியத்துடன் இணக்கம் கணடிருந்தார்.

வாக்கெடுப்பில் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்பி.க்களும் ( சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகிறார்கள்) ஆதரவாக 202 எம்.பி.க்களும் நேற்று வாக்களித்தார்கள். 230 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தத்திற்கு கிடைத்திருக்கும் தோல்வி 95 வருடங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒன்றுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய தோல்வியாகும்.1924 ஆம் ஆண்டில் தொழிற்கட்சி பிரதமர் றாம்சே மக்டொனால்டின் சிறுபான்மை அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 166 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பாராளுமன்றத்தில் கிடைத்திருக்கும் இந்த பிரமாண்டமான தோல்வி ஐக்கிய இராச்சியத்தைச் சூழுகின்ற அரசியல் நெருக்கடியின் பாரதூரத்தன்மையை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. மாற்று வழி கண்டுபிடிக்கப்படாவிட்டால், வெளியேறுவதற்கு மேலும் கால அவகாசத்தை ஐக்கிய இராச்சியம் கோராமலும் விட்டால்  மார்ச் 29 எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமலேயே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறி சேதமுறவேண்டியிருக்கும்.

   ஐரோப்பிய ஒன்றியத்துடன்   கெடுதியான ஒரு ஒப்பந்தத்தை விடவும் ஒப்பந்தம் எதுவும் இல்லாதிருப்பது சிறப்பானது என்று நீண்டநாட்களாக வலியுறுத்திக்கூறிவரும் பிரதமர் மே,  " நல்லதொரு ஒப்பந்தத்துடன் ஒழுங்கமைவான ஒரு முறையில் " ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதையே தான் விரும்புவதாக எம்.பி.க்களுக்கு கூறினார். இது தனது ஒப்பந்தம் இல்லாவிட்டால் எதை அவர்கள் ஆதரிப்பார்கள் என்பதை தெளிவுபடுத்துமாறு அவர் எம்பி.க்களிடம் கேட்டுக்கொண்டார்.

" பிரெக்சிட் பிரச்சினை தீர்த்துவைக்கப்படவேண்டும் என்று விரும்புகின்ற பிரிட்டிஷ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அதைச்செய்வதற்கு அரசாங்கத்துடன் சேர்ந்து பாடுபடுங்கள் " என்று சபையில் சகல தரப்பு எம்.பி.க்களிடமும் அவர் அழைப்பு விடுத்தார்.

     ஆனால், வாக்கெடுப்பு முடிவை " அரசாங்கத்துக்கு கிடைத்த  அனர்த்தத்தனமான தோல்வி " என்று வர்ணித்திருக்கும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கொர்பின், எந்தவொரு உடன்படிக்கையும் இல்லாமல் ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற எண்ணத்தைக் கைவிடுமாறும் தொழிலாளர்களின் உரிமைகளும் பாதுகாப்புகளையும் உத்தரவாதப்படுத்தக்கூடியதான நிரந்தரமானதொரு சுங்கக் கூட்டு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளுமாறும் பிரதமரைக் கேட்டிருக்கிறார். பாராளுமன்றத்தின் மக்கள் சபை பிரெக்சிட் ஒப்பந்தம் மீதான அதன் தீர்ப்பைக் கூறிவிட்டது என்றும் கொர்பின் குறிப்பிட்டார்.

       அரசாங்கத்துக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. பிரிட்டிஷ் நேரப்படி மாலை 7 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெறும்.

      பாராளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தத்தின் தோல்விக்கு முக்கியமான பங்களிப்பைச் செய்த வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சி எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் அரசாங்கத்துடன் சேர்ந்தே வாக்களிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் ஜனவரி 15 இல் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்துடன் சேர்ந்து வாக்களிக்கப்போவதாக தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்திருக்கும் கொர்பின் அதில் வெற்றிபெறுவது பெரும்பாலும் சாத்தியமில்லை. அவர் வெற்றிபெறுவாரேயானால், ஆட்சியை அமைக்கக்கூடிய பெரும்பான்மைப் பலத்தைத் திரட்டிக்காட்டவேண்டியிருக்கும். அதில் தவறினால் பொதுத்தேர்தலை நடத்தவேண்டியிருக்கும். அல்லாவிட்டால் பிரிட்டனின் திடமான பதவிக்கால பாராளுமன்ற சட்டத்தின் கீழ் பொதுத்தேர்தல் 2022 ஆம் ஆண்டில்தான் நடத்தப்படும்.

     அத்தகைய நிலைவரம் தோன்றக்கூடிய சாத்தியம் இல்லாத நிலையில், இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை ஆதரிக்க தொழிற்கட்சி முன்வருமா என்ற கேள்வி எழுகிறது. கடந்த வருடத்தைய  மகாநாட்டில்  இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்று தொழிற்கட்சி உறுப்பினர்களிடமிருந்துவந்த கோரிக்கைகளை கவனத்தில் எடுக்க இணங்கிக்கொள்ளப்பட்டது. இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான எந்தவொரு முயற்சிக்கும் தொழிற்கட்சியின் ஆதரவு முக்கியமானது.

ஆனால், இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பொன்று மாத்திரமே  பிரெக்சிட்டுக்கான காலக்கெடுவை நீடிப்பததற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை இணங்கவைப்பதற்கான மார்க்கமாக இருக்கமுடியும். காலக்கெடு முடிவடைவதற்கு இன்னும் 75 நாட்களே இருக்கும் நிலையில் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறுவதென்பது ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் படுபாதகமாக அமையும் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து மேலும் சலுகைகளைப் பெறுவதன் மூலமாக இன்னொரு பாராளுமன்ற வாக்கெடுப்பில்  பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு ஆதரவைப்பெறுவதில் அரசாங்கத்தினால் வெற்றிபெறக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதையடுத்து கவலை வெளியிட்ட ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் குளோட் ஜங்கர் சாத்தியமானளவு விரைவாக பிரிட்டன் அதன் நோக்கங்களைத் தெளிவுபடுத்தவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

 

(வித்யா ராம் - இந்து)