மன்னார்,  மனித புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது இதுவரை சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர் நுழைவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்த எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை 130 ஆவது நாட்களை கடந்தும் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய அகழ்வுப் பணிகள் குறித்து அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது இன்றுடன் 130 ஆவது தடவையாக இடம்பெற்று வருகின்றது.

இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் குறித்த வளாகத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 294 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக அகழ்ந்து எடுக்கப்பட்ட 294 மனித எலும்புக்கூடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள்  புளோரிடாவிற்கு அனுப்ப மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 23 ஆம் திகதி மனித எச்சங்கள் ஆய்வுக்காக புளோரிடா கொண்டு செல்லப்பட இருக்கின்றன. குறித்த ஆய்வு முடிவுகள் ஒப்படைக்கப்பட்டு இரு வாரங்களில் அறிவிக்கப்படும். அது வரை மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.