ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே. சகல துறைகளிலும் இன்று ஆசியாவில் முதலிடத்திலிருக்கும் சீனா அமெரிக்காவிற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. எவ்வாறு ஒரு நாட்டிற்குள் உட்புகுந்து அந்நாட்டின் சகல விடயங்களையும்  தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனாவிடம் தான் கற்க வேண்டும். 

சீனாவின் ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார சந்தை மட்டுமல்ல மொழி,கலாசாரம், அரசியல் ஆகியவற்றிலும் அது தனது கையை ஓங்கச்செய்துள்ளது என்பது இலங்கையைப்பொறுத்தவரை பொருத்தமாகத்தான் இருக்கின்றது போலும். சீனா இலங்கையில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித்திட்டங்கள் பற்றி பலரும் அறிந்திருப்பர். அது தொடர்பான காட்சிப்படுத்தல்களில் எல்லாம் சீன மொழியான மெண்டரினின் ஆக்கிரமிப்பே பரவியுள்ளது. மட்டுமன்றி, தமிழ் முற்றாக இல்லாமலாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும் இருக்கின்ற அதேநேரம் இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆனால் மேற்படி காட்சிப்படுத்தல் பதாகைகளில் சிங்களமும் மெண்டரின் மொழியும் முதலிரண்டு இடங்களைப்பிடிக்க மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான சர்ச்சை கடந்த வாரங்களில் முகநூல்களிலும் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு பேசுபொருளானது. டுவிட்டர் மற்றும் பேஸ் புக் பகுதிகளில் பலர் இதற்கு தமது எதிர்ப்பை காட்டியிருந்ததோடு, அரச கரும மொழிகள் அமைச்சு உட்பட அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டிருந்தனர். 

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனும் தெரிவித்திருந்தார். எனினும் இது எந்தளவுக்கு அமுல்படுத்தப்படப்போகின்றது என்பது தெரியாதுள்ளது. சீனாவில் மெண்டரின் மட்டுமே அரச அலுவல் மொழியாக இருக்கின்றது. ஏனைய மொழிகள் பேசப்படுவதற்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் அவை பாதுகாக்கப்படுவதற்கான எந்த உத்தரவாதங்களும் இல்லை. ஆனால் தான் கால் பதித்த நாட்டில் தனது செல்வாக்கு மட்டுமன்றி தனது மொழியும் பரவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருக்கின்றது. ஏனெனில் உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற பெருமை சீன மொழியான மெண்டரினுக்கு உள்ளது என்பது முக்கிய விடயம். 

இன்று இலங்கை மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் தனது வர்த்தக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளது சீனா. ஆனால் இலங்கையில் அது முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதற்கு பிரதான காரணம் இந்தியாவாகும். இந்து சமுத்திர பிராந்தியத்தின் தனது கை ஓங்கியிருக்க வேண்டும் என்பது அதன் முதல் விருப்பம் இரண்டாவது இந்தியாவை விட ஆசியாவில் அமெரிக்காவின் தலையீட்டை அது விரும்பவில்லை. 

இலங்கையில் முதலீடு செய்திருக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவே முதலிடத்தில் உள்ளது.  மத்திய வங்கியின் தகவல்களின்படி 2017 ஆம் ஆண்டு சீனா  407 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்து முதலிடத்தில் உள்ளது. 217 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் இரண்டாவது இடத்திலும் 181 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள இந்தியா மூன்றவது இடத்திலும் இருக்கின்றன. எனினும் இலாபத்தை எதிர்பாராது இலங்கை மக்களுக்கு மனிதாபிமான முறையில் ஆற்றி வரும் சேவைகளின் அடிப்படையில் பார்க்கும் இந்தியா முதலிடத்தில் இருப்பதை மறுக்க முடியாது. மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளின் வீடமைப்புத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இங்கு குறிப்பிடலாம்.

எனினும், சீனா மெல்ல மெல்ல தனது வர்த்தக முதலீடுகளுக்காக நாடுகளை ஆக்கிரமிப்பது போன்று மொழி ,கலாசாரம் ஏனைய விடயங்களையும் ஏனைய நாடுகளுக்குள்ளே திணிப்பது போன்ற நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியுள்ளது.  

ஏனெனில் சீனாவின் அபிவிருத்தித்திட்டங்களில் குறிப்பாக கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் சீனத்தொழிலாளர்களே. கிட்டத்தட்ட  தற்போது இலங்கையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சீனர்கள் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வருவதாகக்கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மையானோர் கட்டுமானப்பணிகளில் ஈடுபடுபவர்கள்.

சீனத்தொழிலாளர்கள் பெருமளவில் தங்கியிருக்கும் இடங்களில்  சீன மொழிகளிலேயே பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் சீனத்தொழிலாளர்கள் மெண்டரின் மொழியை மட்டுமே அறிந்தவர்களாக இருக்கின்றனர். சீனா இலங்கையில் மேற்கொண்டுவரும் கட்டுமானப்பணிகளில் சீனர்களே பெரும்பான்மையாக இருப்பது உள்ளூர் தொழிலாளிகளுக்கு தொழில் மறுக்கப்பட்ட ஒரு சம்பவமாகும். அதிலும் தலைநகர் கட்டுமானத்தொழில்களில் கணிசமான தமிழ்த்தொழிலாளர்களே ஈடுபட்டு வருகின்றனர்.  

இலங்கையில் சிங்கள மொழிக்கு அடுத்ததாக பெரும்பாலும் தமிழ் மொழியே உபயோகத்தில் உள்ளது அல்லது பேசப்படுகிறது. ஆனால் சீன மொழிக்கு அரசாங்கம் அதிக செல்வாக்கை வழங்கி வருவது போன்றே உள்ளது.

 கடந்த வருடம் ஒரு தொகை பொலிஸார் மெண்டரின் மொழியை கற்பதற்கு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இதற்கு அரசாங்கம் சார்பில் ஒரு காரணமும் முன்வைக்கப்பட்டது. அதாவது இலங்கைக்கு உல்லாசப்பயணம் உட்பட பல்வேறு தேவைகளுக்கு வருகை தரும் சீனர்கள் தமது காலம் முடிந்தும் தொடர்ந்தும் இங்கு தங்கியிருப்பதாகவும் அது குறித்து அவர்களிடம் விசாரணை செய்ய பொலிஸார் சீன மொழியை கற்க வேண்டி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதில் எந்தளவுக்கு நியாயம் உள்ளதென்பது புரியவில்லை. சீனர்கள் பொதுவாக ஆங்கிலம் பேசுவதில்லை அல்லது அவர்களுக்குத் தெரியாது. அதே வேளை இலங்கை பொலிஸாருக்கும் பொதுவாக ஆங்கில மொழி பரீட்சயம் குறைவாகவே உள்ளது. ஆகையால் அவர்கள் சீன மொழி கற்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது என்பதாகக்கூறப்பட்டது. எமது நாட்டில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை விசாரிக்க அந்தந்த நாடுகளுக்குச்சென்று அவர்களின் மொழியை கற்க வேண்டுமானால் நாளை பொலிஸார் பல நாடுகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். 

எனினும் இலங்கை பொலிஸார் இந்த காரணங்களுக்காக சீனா சென்று மெண்டரின் மொழியைக் கற்க வேண்டிய தேவை எழுந்துள்ளதை வைத்துப்பார்க்கும் போது இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் முதல் இடத்தை சீனர்கள் பெறுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. இல்லாவிட்டால் இலங்கையில் எதிர்காலத்தில் அதிகரிக்கவுள்ள சீனர்களிடம் தொடர்பாடல்களை வைத்துக்கொள்ள வேண்டிய தேவையின் காரணமாக இவர்கள் அம்மொழியை கற்க வேண்டிய தேவை எழுந்துள்ளதோ தெரியவில்லை. 

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கு தமிழ் தெரிந்த அல்லது தமிழ் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதில் அக்கறை காட்டாத அரசாங்கம் சீன மொழி கற்பதற்கு பொலிஸாரை சீனாவுக்கு அனுப்புகிறது. 

இலங்கை பொலிஸார் மட்டுமல்ல இந்தியாவில் எல்லைப்புறங்களில் காவல் கடமைகளில் ஈடுபட்டுவரும் இந்திய இராணுவத்தினருக்கும் சீன மொழி கற்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இந்தியா - சீன எல்லையில் புதிதாக அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு படைத்தளங்களில் கடமையாற்றும் இந்திய இராணுவத்தினருக்கு சீன மொழி பயிற்சி அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன் பிறகு குறித்த வீரர்களுக்கு அத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சீன வீரர்களுடனான தவறான புரிதலை தவிர்த்துக்கொள்ள இது உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் இந்திய இராணுவ வீரர்களுக்கு இருக்கும் ஆங்கில புலமை சீன இராணுவத்தினருக்கு இல்லை. ஆனால் இந்திய இராணுவத்தினர் சீன மொழியை கற்பது தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என உடனடியாக சீனா பதற ஆரம்பித்து விட்டது.

அமைதியான சூழலில் பரஸ்பர புரிந்துணர்வுக்கு இது ஏற்புடையதாக இருந்தாலும்  போர் சமயத்தில் சீன வீரர்கள் பேசுவதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் போர் வியூகங்களை வகுக்க இது சர்ந்தர்ப்பங்களை ஏற்படுத்தி விடும் என சீன பாதுகாப்பு அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். அவர்கள் மொழியை பாதுகாப்பதிலும் தக்க வைத்துக்கொள்வதிலும் அவர்கள் எந்தளவிற்கு தீவிரமாக செயற்படுகின்றார்கள் என்பதற்கு இது ஒர் உதாரணம் மட்டுமே. 

ஆனால் இலங்கையைப்பொறுத்தவரை அந்தப் பயம் சீனாவுக்கு இல்லை. ஏற்கனவே தனது  உதவித்திட்டங்கள் மூலம் நீண்டகால கடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று இந்திய உபகண்டத்தில் பொருளாதார ரீதியாக சீனாவிலேயே இலங்கை தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.  இரண்டும் பௌத்தத்தை பின்பற்றும் நாடுகள். ஆகவே அந்த ஒருமைப்பாடு எப்போதும் இருக்கும்.

சீனாவின் வேகத்தைப்பார்க்கும் போது பொலிஸார் மட்டுமன்றி, இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை எதிர்காலத்தில் எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- சிவலிங்கம் சிவகுமாரன்