இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதற்கு தயார் என தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டே பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர்  சர்வதேச நாணயநிதியத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர் கிறிஸ்டைன் லகர்டே அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை சந்தித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளேன் என அறிக்கையில் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்து பணிப்பாளர், நாங்கள் சவாலான பொருளாதார  சூழல் மற்றும் முன்னுரிமைக்குரிய விடயங்கள் குறித்து ஆராய்ந்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இலங்கை அதிகாரிகள் வலியுறுத்தினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களிற்கு நன்மையளிக்கக் கூடிய பேண்தகு உயர்பொருளாதார வளர்ச்சிப்பாதையில் இலங்கையை செலுத்துவதற்கு வலுவான கொள்கைகளும் அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலும் அவசியம் என்பதை வலியுறுத்தினோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று  எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.