(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 58 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு அரசமுறை விஜயமொன்றை மேற்கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு விடுக்கப்பட்ட முதலாவது அழைப்பை நினைவுகூரும் வகையில் அந்நாட்டுக்கான நான்கு நாள் அரச முறை விஜயமொன்றை  மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மணிலா நகரின் நிநோயி அகினோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 1961ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பில் தூதுவர் அலுவலகமொன்றை திறந்துவைத்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கும் பிலிப்பைன்ஸூக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகின.

1973ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிலிப்பைன்ஸூக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர் சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றுவதற்காக பல தலைவர்கள் பிலிப்பைன்ஸ் சென்றிருந்தாலும் பிலிப்பைன்ஸிடமிருந்து இராஜதந்திர மட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை புதிய துறைகளை நோக்கி விரிவுபடுத்தி இரண்டு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.