கென்யாவின்  தலைநகர் நைரோபியில் இஸ்லாமிய தீவிரவாதிகள்  ஹோட்டலொன்றின் மீது   மேற்கொண்ட தாக்குதலில் அமெரிக்க பிரஜையொருவர் உட்பட 15ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கென்யாவை உலுக்கியுள்ள இந்த தாக்குதலிற்கு அல் சகாப் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

கென்ய தலைநகரில் உள்ள டியுசுட்டி 2 என்ற கட்டிட வளாகத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வளாகத்தில் ஹோட்டல்கள் உட்பட பல வணிகவளாகங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

 மூன்று மணிக்கு இந்த ஹோட்டல் மீது தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.

குறிப்பிட்ட ஹோட்டல் அமைந்திருந்த பகுதியிலிருந்து துப்பாக்கிவேட்டுகளையும் குண்டு சத்தங்களையும் கேட்க முடிந்ததாகவும் பின்னர் அதன் பின்னர் பொலிஸாரும் மருத்துவ பணியாளர்களும் அப்பகுதிக்கு விரைந்தனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஹோட்டல் பணியாளர்கள் மற்றும்  அந்த பகுதியில் உள்ள அலுவலகங்கள் வணிக வளாகங்களில் பணிபுரிபவர்கள் தப்பியோடத்தொடங்கினர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இரண்டு கார்கள் மிகவேகமாக ஹோட்டலை நோக்கி சென்றன அதில் ஒரு காரை ஹோட்டல் வாசலை உடைப்பதற்கு தீவிரவாதிகள் பயன்படுத்தினர் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் ஆயுதாரிகள் ஹோட்டலின் பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் ஹோட்டலிற்குள் நுழைந்துள்ளனர்.

முதலில் அவர்கள் தாய்லாந்து உணவுவிடுதியில் காணப்பட்ட வங்கிகளையும் உணவகங்களையும் இலக்குவைத்துள்ளனர்

பாரிய சத்தமொன்றையும் மக்கள் அலறுவதையும் கேட்டேன் என அந்த உணவுவிடுதியில் பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார். நான் அடித்தளத்தின் ஊடாக  வெளியேறினேன் என அவர் தெரிவித்த்துள்ளார்.

நான் உயிருடன் இருக்கின்றேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை பாரிய சத்தம் கேட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் இராணுவசீருடையில் காணப்பட்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்

இதன் பின்னர் படையினருக்கும் தீவிரவாதிகளிறகும் இடையில் பல மணிநேரம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது

எரிந்துகொண்டுள்ள பல கார்களில் இருந்து கரும்புகைமண்டலம் வெளியாகிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போது கென்ய படையினர் அந்த ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன