நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைவரத்தில் ஓரளவு மேம்பாடு ஏற்பட்டிருப்பதாக மக்களை நம்பவைப்பதற்கான பிரயத்தனத்தில் அரசாங்கத் தரப்பினர் பல்வேறு கதைகளைக் கூறினாலும், உண்மையிலேயே குற்றச்செயல்கள் படுமோசமாக அதிகரித்தவண்ணமே இருக்கின்றன.பாதாள உலகக் குழுக்களிடையேயான பகைமையின்  விளைவாக தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்கொலைகள் இடம்பெறாமல் அண்மைக்காலமாக ஒரு வாரம்கூட கழிந்ததில்லை. கடந்த  ஞாயிற்றுக்கிழமை கூட வத்தளையில் பட்டப்பகலில் இருவர் துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

போதைப்பொருள் கடத்தல் வியாபாரம், கொலைகள்  உட்பட பாதாள உலகக் குழுக்களின்  குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமோ அவ்வாறு பொலிசார் செயற்படுவதில்லை என்பது அவர்கள் மீதான சமூகத்தின் பரவலான குற்றச்சாட்டாக இருக்கிறது. குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சட்டம், ஒழுங்கு நிலைவரம் ஒழுங்காகப் பேணப்படுவது உறுதிசெய்யப்படும் என்றும் அரசாங்கத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் அடிக்கடி சூளுரைப்பதைக் கேட்டு மக்கள் சலித்துப்போய்விட்டார்கள். 

குற்றச்செயல்களை குறிப்பாக பாதாள உலகக்குழுக்களின் சட்டவிரோதச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அரசியல் தலைமைத்துவத்தை அரசாங்கத் தரப்பினர் வழங்குவதில்லை. முக்கியமான பாதாள உலகத் தலைவர்கள் முன்னணி அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதுடன் பிரதான அரசியல்கட்சிகளுக்காக வேலைசெய்பவர்களாகவும் இருக்கிறார்கள். சிறைக்குள் இருந்துகொண்டும் உயரதிகாரிகளின் அனுசரணையுடன் வெளிநாடுகளுக்கு விமானநிலையத்தின் ஊடாகவே தப்பிச்சென்று அங்கிருந்துகொண்டும் உள்நாட்டில் தங்களது கும்பல்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளை வழிநடத்துகின்ற அளவுக்கு பாதாள உலகத் தலைவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்குகிறார்கள்.

சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றைக் கட்டியெழுப்புமுகமாக  சிறுவர்களுக்கு சட்ட அறிவைக் கொடுப்பதற்கு பாடசாலைகளில் சட்டத்தை ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நீதி, சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துக்கோரள அரசாங்கத்தின் திட்டம் குறித்து விளக்கமளித்திருக்கிறார்.பாடசாலை மாணவர்களுக்கு சட்டத்தைப் போதிக்கலாம், ஆனால்  அவர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய சட்ட அறிவு மாத்திரம் அவர்கள் நற்பண்புள்ள பிரஜைகளாக வளரக்கூடிய சிறந்த இடமாக எமது நாட்டை உறுதிசெய்யுமா என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

சட்ட அறிவு இல்லாத காரணத்தினால்தான் ஆட்கள் சட்டத்தை மீறுகிறார்கள் என்று சொல்லமுடியாது அல்லது தங்களது செயல்களினால் ஏற்படக்கூடிய விளைவுகளை தெரிந்துகொள்ளாதவர்களாக இருப்பதனால் தான் குற்றச் செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறமுடியாது. வீடுடைத்து திருடுவது சட்டவிரோதமானது என்று திருடர்களுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்திருந்தும் அவர்கள் திருடாமல் விடுவதில்லை.போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகள் மற்றும் கொந்தராத்துக் கொலைகாரர்கள் போன்ற ஏனைய கிறிமினல்களுக்கும் தங்களது செயற்பாடுகள் சட்டவிரோதமானவை என்று நன்றாகவே தெரியும். தாராளமான சட்ட அறிவுடையவர்கள் பாரதூரமான குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் நாம் அறிவோம்.

சட்டத்தரணிகளான அரசியல் தலைவர்களின் தலைமையிலான அரசாங்கங்கள் படுமோசமான சட்டமீறல்களைச் செய்திருப்பதை வரலாற்றில் நாம் கண்டிருக்கின்றோம். அந்த அரசாங்கங்களின் உறுபபினர்கள் அப்பட்டமான சட்டமீறல்களிலும் அதிகார துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டுவிட்டு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதையும் நாம் அறிவோம். சிறந்த சட்டமேதையான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இரு பதவிக்காலங்களிலும் பாரதூரமான சட்டமீறல்கள் இடம்பெற்றபோது சட்டம் மௌனமாக இருந்தது என்பது வரலாறு. அவரின் ஆட்சிக்காலத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்து கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அடிப்படை உரிமைமீறல் வழக்கொன்றில் அரசாங்கத்துக்கு அசௌகரியமாக அமைந்த  தீர்ப்பொன்றை வழங்கியமைக்காகவே அந்த நீதியரசர்களின் கொழும்பு வீடுகளுக்கு முன்பாக முக்கியமான அமைச்சர்கள் சிலரின் தூண்டுதலுடன் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இதுதான் சட்டவாதிகளான அரசியல் தலைவர்களின் ஆட்சிகளில் சட்டத்துக்கு நேர்ந்த கதி!

சட்டத்தை உகந்தமுறையில் நடைமுறைப்படுத்தி, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன்னால் நிறுத்தி தாமதமின்றி தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்வதே அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு மிகவும் பயனுறுதியுடைய வழியாகும். அம்பாந்தோட்டையில் நாற்பது வருடங்களுக்கு முனனர் இடம்பெற்ற கொலையொன்று தொடர்பான வழக்கில் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கடந்தவாரம் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டு, அநாவசிய தாமதமின்றி நீதித்துறை விரைவாகச் செயற்படுவதை உறுதிசெய்வதில் அக்கறை காட்டாமல் பாடசாலைச் சிறுவர்களுக்கு சட்டத்தைப் பாடமாக அறிமுகப்படுத்துவதன் மூலமாக எந்தப் பிரயோசனமும் கிட்டாது. இது நுளம்புகள் பெருகுகின்ற இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பிரசாரம் செய்வதற்கு ஒப்பானதாகும். 

 ( வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுகளம் )