பருத்தித்துறை கற்கோவளத்தில் இளைஞர் ஒருவர் அடித்து படுகொலை செய்ய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் தந்தை , மகன் ஆகிய இருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். 

வடமராட்சி , பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் (வயது 22) எனும் இளைஞனே அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். 

சடலமாக மீட்கப்பட்ட நபர் வீட்டிற்கு சற்று தொலைவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்ததாகவும் , அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் அதில் உரையாடிக்கொண்டு சென்ற போது சற்று தூரத்தில் நின்ற இனம்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் நேற்று திங்கட்கிழமை இரவு தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். 

மற்றுமொரு சந்தேக நபர் தலைமறைவாகி விட்டதாகவும் , அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.