சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை வல்லவரான சேனாபதியின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றிப்படமான ‘இந்தியன்’ பலதரப்பினரின் கவனத்தை கவர்ந்தது. 

தற்போது மக்கள் நீதி மய்யம் என்னும் தனிக்கட்சியை கமல்ஹாசன் தொடங்கியுள்ள நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்க இயக்குனர் சங்கர் தீர்மானித்தார். இதில் கமல் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சமூக அவலங்களை தட்டிக்கேட்கும் ‘சேனாபதி’ கதாபாத்திரத்துக்கான மேக்அப் டெஸ்ட் முடிந்து படக்குழுவினருக்கு திருப்திகரமாக அமைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், இந்தியன்  -2 படத்தில் வயதான சேனாபதி கதாபாத்திரத்தின் ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படம் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வர்மக்கலை முத்திரையான இருவிரல் ஆக்ரோஷத்துடன் முகம் ‘ஜூம்’ செய்யப்பட்ட நிலையில் வெளியான இந்தப்படம் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்தியன் - 2 படப்பிடிப்பு எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்ற அறிவிப்பையும் இந்த ‘பெர்ஸ்ட் லுக்’ புகைப்படத்துடன் இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார்.