இயற்கைக்கு நன்றி வெலுத்தவும் தரணியில் வளம் செழிக்கவும், வேளாண்மைக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லி, தைத்திருநாளை வரவேற்கும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் நாமும் வீரகேசரி இணையத்தளம் சார்பாக எமது இணையத்தள வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை அளித்துள்ளனர் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. கமத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையையே அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் இது புலப்படுத்துகின்றது.

அத்தோடு வாழ்வின் ஆதாரமான விவசாயத்திற்கு நீர், ஒளி, வெப்பம், காற்று ஆகியவற்றை உருவாக்க உதவிவரும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் முகமாக உலகெங்கும் வாழும் தமிழர்கள் பண்டுதொட்டு கொண்டாடிவரும் தைப்பொங்கல் தினத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பால் பொங்கி வழிவதைப் போல் அனைவரது உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருகிப் பிரவாகித்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே தமிழ் மக்கள், தமது விளைச்சலினால் பெற்றுக்கொண்ட புத்தரிசி மற்றும் தானியங்களோடு தூய பாலும் சர்க்கரையும் கலந்து பொங்கி மகிழ்கின்றனர். பல இன, மத, கலாசார சமூகத்தைக் கொண்ட எமது நாட்டின் கலாசார பன்மைத்துவத்தின் செழுமைக்கு இத்தகைய பண்டிகைகள் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்பதே எனது நம்பிக்கையாகும்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்துவரும் உறுதியான நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கை கைக்கூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான வலிமையான உறவினை மென்மேலும் மெருகூட்டும் வகையிலும் தமிழ் கலை, கலாசாரத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் தைத்திருநாளைக் கொண்டாடி மகிழும் இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அனுப்பிவைத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில்,

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர்தின திருநாளில், தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமலும் குடியேறிய நிலங்களில் பயிர்செய்ய முடியாமலும் உள்ள எமது மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். 

மேலும் சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான அரசியல் தீர்வின் ஊடாக எம்மக்களின் எதிர்காலம் வளமடைய இந்நன்னாளில் பிரார்த்தனை செய்வோமாக. 

எமது மக்களின் நிலங்கள் அதிக விளைச்சலையும் செழிப்பையும் தந்து எம்மக்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ். ஆயரின் பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில்,

பிளவுபடாத இலங்கை நாட்டுக்குள் மூவின மக்களும் ஏற்கும் விதமாக புதிய அரசியல் அமைப்பு உருவாகவேண்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் பொங்கல் தினவாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நன்றிப் பெருவிழாவான பொங்கல் விழா உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களால்  கொண்டாடப்படும் வேளை இவ்விழாவை கொண்டாடும் அனைவருக்கும்  நீங்கள் எங்கிருந்தாலும் 2019ஆம் ஆண்டிற்குரிய பொங்கல் தின விழா வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறோம். 

பொங்கல் விழா நன்றியின் விழா. நம்மை என்றும் நன்றி கூறிக்கொண்டே இருக்க அழைப்பு விடுக்கும் விழா. நம்மைத் தாங்கும் நிலம் நமக்குத் தருகின்ற அனைத்து பயன்களுக்கும் நன்றி சொல்லும் விழா. முதல் விளைச்சலை இறைவனுக்கும் இயற்கைக்கும் காணிக்கையாக்கும் விழா. 

பொங்குக நன்றியால் பொங்குக - இறைவன் அளித்த தரையை எண்ணி - தரையளித்த விளைவை எண்ணி -  பொங்குக நன்றியால் பொங்குக என இந்த விழாவை மகிழ்வோடு கொண்டாடுவோம். 

இலங்கை நாடு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல்  இன்றுரை இங்கு வாழ்கின்ற  மூன்று இன மக்களும் சங்கிலித் தொடராக இன மோதல்களையும் அதன் உச்சக்கட்டமாக மூன்று தசாப்தகால  போர் அனுபவங்களையுமே பெற்றுள்ளார்கள். போர் முடிந்து 10 ஆண்டுகளாகியும் இன்னும் நீதியோடு கூடிய நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்பது வேதனையானது. 

அரசியல் தீர்வுக்கு அடித்தளமாக பார்க்கப்டும் புதிய அரசமைப்பு சுதந்திர தினத்திற்கு முன்னர்  சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது பற்றி பலரும் பலவிதமான சாதக பாதக கருத்துக்களை  தெரிவிக்கின்றனர். இனவாத சிந்தனையை தூண்டாது கடந்த கால வரலாற்றை மனதிற் கொண்டு இலங்கை வாழ் மக்கள் என்ற சிந்தனையுடன் செயற்படும்படி பாதக கருத்துக்களை  தெரிவிப்போருக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.     

இலங்கையில் நிலவும் நீண்டகால இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு கண்டே ஆகவேண்டும்.   பிளவுபடாத இலங்கை நாட்டுக்குள் சிங்கள தமிழ் முஸ்லீம் என்ற மூவின மக்களும் ஏற்கும் விதமாக இது அமைய வேண்டும். 

அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்ட  மாற்றப்பட முடியாத நீதியோடு கூடிய நிரந்தர அதிகாரப் பகிர்வை இந்த அரசு வழங்க வேண்டும். எல்லா தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நியாயமானதாக இது அமைய வேண்டும். 

இது போன்ற ஒரு சந்தர்ப்பம் இனி ஏற்படும் என எதிர் பார்க்க முடியாது. தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்  இந்த இறுதிச் சந்தர்ப்பத்தை இலங்கை நாட்டை உண்மையாகவே நேசிக்கும் சிங்கள தமிழ் முஸ்லீம் தலைவர்கள் அனைவரும் தக்க முறையில் பயன்படுத்த வேண்டும் என இலங்கை வாழ் அனைத்து மக்கள் பெயராலும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம். 

வடமாகான புதிய ஆளுனராக நியமிக்கப்பட்ட தமிழரான கலாநிதி சுரேன் இராகவன் அவர்களை அன்புடன் மகிழ்வோடு வரவேற்கிறோம். இவ்வாண்டில் நடக்கப் போகும் விடயங்களை நம்பிக்கையோடும் இறையாசீருடனும்  வரவேற்க வாழ்த்துகிறோம் என்றுள்ளது.