- பி.கே.பாலச்சந்திரன்

இலங்கை பாராளுமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர் குழுவின் அறிக்கை சகல வல்லமையும் பொருந்திய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து அதற்குப் பதிலாக பலம்பொருந்திய பிரதமரையும் சம்பிரதாயபூர்வமான ஜனாதிபதியையும் கொண்ட வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சிமுறையை விதந்துரைக்கிறது.

அரசியலமைப்பு வரைவு என்று வர்ணிக்கப்படக்கூடிய இந்த அறிக்கையின் பிரகாரம்    ஜனாதிபதி மக்களினால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படமாட்டார். பதிலாக இரு சபைகளைக்கொண்ட சட்டவாக்கசபையினால் ( 233 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தினாலும் 55 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது சபையினாலும்) தெரிவுசெய்யப்படுவார். இரு சபைகளையும் சேர்ந்த முழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களே  ஜனாதிபதியைத்  தெரிவுசெய்வர்.

இது ஜனாதிபதியின் தார்மீக அதிகாரத்தில் பாரிய வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தற்போது ஜனாதிபதி மிகப்பெரிய அதிகார உணர்வை அனுபவிக்கிறார். ஏனென்றால் இலங்கையின் முழு வாக்காளர்களினாலும் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுகின்ற இலங்கையின் அதியுயர் பதவிக்குரிய கதிரையில் அவர் அமர்ந்திருக்கிறார். மற்றவர்கள் சிறிய தொகுதிகளில் வாக்காளர்களினால் பாராளுமன்றத்துக்கு  தெரிவுசெய்யப்படுகிறார்கள்( பிரதமரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.) 

அதனால் ரேடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதி தானே இலங்கையின் இறைமையினதும் சுயாதிபத்தியத்தினதும் முழுநிறைவான கருவூலம் என்று என்று சட்டப்படி  உரிமையைக் கோரமுடியும். மறைமுகமாகத் தெரிவுசெய்யப்படுகின்ற ஜனாதிபதியினால் அவ்வாறு உரிமைகோர முடியாது.

புதிய அரசியலமைப்பு வரைவின் கீழ்  பிரதமரையும் அமைச்சரவையையும் தெரிவுசெய்கின்ற தனது அதிகாரத்தை ஜனாதிபதி இழக்கிறார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டிருப்பவர் என்று தான் கருதுகின்ற ஒருவரை அல்ல, பெரும்பான்மை ஆதரவை ஐயத்துக்கு இடமின்றி கொண்டிருப்பவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்கவேண்டும். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாத்திரமே ஐனாதிபதி அமைச்சர்களை நியமிக்கவேண்டியிருக்கும். பிரதமரின் சம்மதம் இல்லாமல் அமைச்சுகளுக்கு திணைக்களங்களை ஒதுக்கீடு செய்கின்ற அதிகாரத்தையும் ஜனாதிபதி இழக்கிறார்.

இப்போது நடைமுறையில் இருப்பதைப் போலன்றி, ஜனாதிபதி அரசாங்கத்தின் தலைவராக இருக்கவோ அமைச்சுப் பொறுப்புக்களை தன்வசம் வைத்திருக்கவோ அல்லது அமைச்சரவைக்குத் தலைமைதாங்கவோ முடியாது. அவர் அரச தலைவராகவும் ஆயுதப்படைகளின் பிரதம தளபதியாகவும் மாத்திரமே இருப்பார். ஆனால், பிரதம தளபதி என்ற வகையில் ஜனாதிபதியின் ஒவ்வொரு நடவடிக்கையும் பிரதமரின் ஆலோசனைக்கு இணங்கவே முன்னெடுக்கப்படவேண்டும்.

தனது விருப்பப்படி பாராளுமன்றத்தைக் கலைக்கும் உரிமையையும் ஜனாதிபதி இழப்பார். பாராளுமன்றத்தை அதன் ஐந்து வருட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாக கலைப்பதாக இருந்தால், அதன் முழு உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவுடன் சபையில் நிறைவேற்றப்படக்கூடிய பிரேரணை ஒன்றின் மூலமாக மாத்திரமே அவ்வாறு செய்யமுடியும்.

பிரதமரரையும் அமைச்சரவையையும் தனது விருப்பப்படி ஜனாதிபதி பதவி நீக்கமுடியாது. சபையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது முதல் இரு வருடங்களுக்குள் வருடாந்த பட்ஜெட்  மூன்றாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் அல்லது முதல் மூன்று வருடங்களுக்குள் வருடாந்த பட்ஜெட் இரண்டாவது தடவை தோற்கடிக்கப்பட்டால் மாத்திரமே பிரதமரும் அமைச்சர்களும் பதவியிழப்பர்.

மன்னிப்பு வழங்குவது தொடர்பாக கொண்டிருக்கும் தற்துணிபு அதிகாரத்தையும் ஜனாதிபதி இழப்பார். மன்னிப்பு வழங்கும் பொறுப்பு பிரதமரினாலும் நீதித்துறைக் குழுவொன்றினாலேயே செயற்படுத்தப்படும். இது தொடர்பிலான தீர்மானங்களுக்கு கைப்பொறிப்பு முத்திரை குத்தும் ஒருவராக மாத்திரமே ஜனாதிபதி இருப்பார்.

ஜனாதிபதி மனநலம் குன்றியவராக அல்லது உடல்ரீதியாக இயலாமைகொண்டவராக அடையாளம் காணப்பட்டால் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினால் அவரை பதவி நீக்கமுடியும். பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானம் ஒன்றின் மூலமாகவும் ஜனாதிபதியை பதவி நீக்கமுடியும்.

தெரிவாகியதற்குப் பின்னர் ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கொண்டிருக்கக்கூடிய சகல தொடர்புகளையும் துண்டித்துவிட வேண்டும். கட்சி சார்பின்றி அல்லது பக்கச்சார்பின்றி  அவர் செயற்படவேண்டும். ஜனாதிபதி கட்சியொன்றின் தலைவராக இருக்க அனுமதிக்கின்ற தற்போதைய அரசியலமைப்பின் ஏற்பாடுகளில் இருந்து இது முக்கியமான ஒரு விலகலாகும்.

மாகாண சுயாட்சிக்கான கோரிக்கையைப் பொறுத்தவரை,  அரச நிலம் தொடர்பான அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் ( தேசிய காணி ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க நிலப் பயன்பாடு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனையுடன்) அரசியலமைப்பு வரைவு கொடுக்கிறது. ஆனால், ஆணைக்குழுவின் கொள்கைகள் சகல மாகாணசபைகளுடனும் கலந்தாலோசனை செய்தே வகுக்கப்படவேண்டும்.

மாகாணங்கள் பிரதி பொலிஸ்மா அதிபர் தரத்திலான அதிகாரிகளின் தலைமையிலான சொந்த பொலிஸ்படையையும் கொண்டிருக்கும். தேசிய மட்டத்திலும் மாகாண மட்டங்களிலும் நியமனங்கள், இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகளை செய்வதற்கு தனித்தனியான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுவும் இருக்கும்.

தேசிய சட்டவாக்க சபைக்கு இரண்டாவது சபையொன்றை அரசியலமைப்பு வரைவு அறிமுகம் செய்கிறது. கீழ்சபையான மக்கள் பிரதிநிதிகள் சபை ( பாராளுமன்றம்) 233 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். பதவிக்காலம் ஐந்து வருடங்களாக இருக்கும். இவர்களில் 140 பேர் தனியொரு உறப்பினருக்கான தொகுதிகளில் இருந்து தெரிவாவர். எஞ்சிய உறுப்பினர்கள் மாகாண அடிப்படையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ் தெரிவுசெய்யப்படுவர்.

இரண்டாவது சபை 55 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இவர்கள் பாராளுமன்றத்தினாலும் மாகாண சபைகளினாலும் தெரிவுசெய்யப்படுவர். இந்த இரண்டாவது சபை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படுகின்ற சட்டமூலங்களை தடுக்கின்ற வகையிலான எந்தப்பணியையும் செய்யாமல் அவற்றை ஆராய்ந்துபார்த்து மேம்படுத்தல்களைச் செய்வதற்கான யோசனைகளைத் தெரிவிக்கும். சட்டமூலங்களை வரையும் செயற்பாடுகளைப் பொறுத்தவரை பாராளுமன்றம் இரண்டாவது சபையினால் தெரிவிக்கப்படக்கூடிய கருத்துக்களையும் பரசீலனைக்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையை ' ஏக்கிய ராஜ்ஜிய ' என்று சிங்களத்திலும் ' ஒருமித்த நாடு ' என்று தமிழிலும் ( இதன் அர்த்தம் ஐக்கியப்பட்ட நாடு) அரசியலமைப்பு வரைவு வர்ணிக்கிறது. ' ஒற்றையாட்சி ' அல்லது ' சமஷ்டி ' என்ற கோட்பாடுகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கடுமையான உணர்வுகள் இருப்பதை கருத்திற்கொண்டு அரசியலமைப்புக்கு நாமகரணஞ்சூட்டுவதற்கு அந்த இரு சொற்களில் எந்தவொன்றையும் பயன்படுத்துவதை நிபுணர்குழு தவிர்த்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 

பௌத்த மதத்திற்கு தற்போதைய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ' அதிமுதன்மை ' அந்தஸ்தை அவ்வாறே விட்டுவைத்திருக்கும் அதேவேளை, இந்த வரைவு  ஏனைய மதங்களை பின்பற்றி அனுஷ்டிப்பதற்கான சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்திருக்கிறது. ஏனைய அரசியலமைப்புகளில் இருந்து ஒரு விலகலாக, வரைவு தனிநபர்களினதும் குடும்பங்களினதும் அந்தரங்கத்தை உத்தரவாப்படுத்துகிறது.

வரைவை சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதை ஒரு ' வரைவு' மாத்திரமே என்று அழுத்தியுரைத்தார். 6 உப குழுக்களில் வெளிப்படுத்தப்பட்ட சகல கருத்துக்களினதும் சுருக்கத்தொகுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். வரைவுகளையும் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளையும் ஆழமாக ஆராய்ந்து பார்த்து அரசியலமைப்பின் ஒவ்வொரு அம்சம் தொடர்பிலும் கருத்தொருமிப்புக்கு வருமாறு உறுப்பினர்களிடம் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். 

இந்த அரசியலமைப்பு நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தில் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும்.

( நியூஸ் இன் ஏசியா)