(எம்.மனோசித்ரா)

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைக்கவுள்ள கூட்டணியில் அங்கத்துவம் வகிக்க விரும்பாத சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய  தேசியக் கட்சியுடன் இணைந்து தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு தற்போது அரசியலமைப்பைக் காட்டி புதிதாக ஒரு பிரச்சினையை ஆரம்பித்துள்ளனர்.

அது தொடர்பாக மாத்திரமே கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். நாட்டில் காணப்படும் ஒருமைப்பாட்டினையும் அரசுரிமையினையும் பாதிக்கும் வகையில் நாம் ஒரு போதும் செயற்படப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.