(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிதியுதவியை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அமெரிக்காவின் வொஷிங்டன் சென்றடைந்துள்ளனர். 

விரிவுபடுத்தப்பட்ட நிதி ஏற்பாட்டுத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் காரணமாக நவம்பர் மாதமளவில் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இடைநிறுத்தப்பட்ட நிதியினை மீளப்பெற்றுக் கொள்ளும் நோக்கில் வொஷிங்டன் சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் 14 – 16 வரையான திகதிகளில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். 

இப்பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதை தெரியப்படுத்துவதுடன், இடைநிறுத்தப்பட்ட நிதியுதவியை மீளவும் பெற்றுக் கொள்வதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட நிதி ஏற்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று வருட கடன் அடிப்படையில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டது. 

அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து ஆறாவதுகட்ட கடன் வழங்கல் தொகையான 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கல் இடைநிறுத்தப்பட்டது. இவ்வருடத்தின் நடுப்பகுதி வரையிலான ஏழு கட்டங்களாகப் பிரிக்கப்பட்ட கடன் வழங்கல் மூலம் முழுமையான கடன் வழங்கலை நிறைவு செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்த நிலையிலேயே மேற்கண்டவாறு சர்வதேச நாணய நிதியத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.