(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன  பெரமுன  முன்னணி  எவருடனும்  கூட்டணியமைத்துக் கொள்ளாமல்  வெற்றிபெற   முடியும். சுதந்திரக்  கட்சியுடன்    நாங்கள்  தற்போது  கூட்டணியமைத்துக்  கொள்ளாவிடின் அது  ஐக்கிய தேசிய  கட்சிக்கு  சாதகமாக  அமையும். ஆகவே  பிரதமர்  ரணில்  விக்ரமசிங்கவிற்கு  எதிராக  செயற்படும்  அனைவரையும்  ஒன்றிணைப்பதே எமது  நோக்கம்  என  பாராளுமன்ற   உறுப்பினர்  வாசுதேவ  நாணயக்கார  தெரிவித்தார்.

அவர்  மேலும்  குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன  மற்றும்  சுதந்திரக் கட்சி  ஆகிய  இரண்டும் ஒன்றிணைந்து புதிய  கூட்டணியமைத்து  இடம்பெறவுள்ள  தேர்தல்களை  எதிர்கொள்வதாகவே  தீர்மானிக்கப்பட்டது. 

புதிய   கூட்டணி  தொடர்பில் மாத்திரம்   குறிப்பிடப்பட்டதே   தவிர  அதற்கான  எவ்வித  நடவடிக்கைகளும் இதுரையில் இரு  தரப்பில் இருந்தும்  முன்னெடுக்கப்படவில்லை  . அதற்கு  பல்வேறு   காரணிகள்   செல்வாக்கு   செலுத்துகின்றன.

ஜனாதிபதி  வேட்பாளர்  யார் ,  எவ்வாறு  போட்டியிடுவோம் போன்ற   கருத்துக்களில்  வாதப்பிரதிவாதங்களை   முன்னிலைப்படுத்துவது   தற்போதைய  அரசியல் செயற்பாடுகளுக்கு    பொருத்தமற்றதாகும்.

 ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  மற்றும்      எதிர்கட்சி  தலைவர்   மஹிந்த   ராஜபக்ஷ  ஆகிய  இரண்டு   தரப்பினரது  புதிய  கூட்டணி   தொடர்பில்  இரு  தரப்பின் பெரும்பான்மையான  உறுப்பினர்களுக்கு  விருப்பமற்ற  தன்மையே    காணப்படுகின்றது.  இன்றைய  நிலையில்   கட்டாயம்   ஒரு   புதிய  அரசியல்  கூட்டணி   தோற்றம்  பெற   வேண்டும்.  அது   ஐக்கிய  தேசிய    கட்சிக்கு   எதிராக    செயற்பட   வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.