சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் ஒழிப்பு அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதானது இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென 96 உலக கிண்ண வெற்றி அணியின் தலைவரும் , போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். 

கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற மரக் கன்றுகள் பகிர்ந்தளித்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, 

விளையாட்டுதுறை அமைச்சர் மாறியவுடன் ஒரு இரவில் அனைத்தையும் சரி செய்ய இயலாது. “ கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாம் உருவாக்கிய அரசாங்கத்தில் துரதிஷ்டவசமான விளையாட்டு அமைச்சர்களும், அவ்வமைச்சர்ளை பாதுகாக்கின்ற கவசமான சூதாட்டகாரர்களும் இருந்தார்கள். 

அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து கிரிக்கெட் விளையாட்டை அழித்துவிட்டார்கள். இவ்விடயம் தொடர்பில் நாம் பல முறை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தோம். பிரதம அமைச்சரிடமும் பல முறை எடுத்துரைத்தோம். 

கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அழிவின் பலாபலன்களை தற்பொழுது நாம் அனுபவிக்கின்றோம். விளையாட்டு காட்டிகொடுப்புக்களில் சிக்கியுள்ளார்கள். சர்வதேச கிரிக்கெட் சபையானது விளையாட்டு காட்டிகொடுப்புக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகமொன்றை இலங்கையில் நிறுவ முயற்சிக்கின்றது. 

இது நாட்டிற்கு மாபெரும் வெட்கக்கேடாகும். இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் நெருக்கமாக செயற்பட்டவர்களே கிரிக்கெட்டையும் ஆண்டார்கள். அவர்களே இந்நிலைக்கு பொறுப்புக் கூறவேண்டும். 

உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு இன்னும் சிறிது காலமே எஞ்சியுள்ளது. தற்போதுள்ள நிலையுடன் ஒப்பிடுகையில் இச் சுற்றுப் போட்டிக்கு தயாராகுவது இலகுவான காரியமல்ல. எம்முடைய வீரர்கள் திறமையானவர்கள். எம்முடைய நிருவாகத்தில் தான் பல பிரச்சினைகள் இருக்கின்றன. எதிர்வரும் தேர்தல்களின் பொழுது இவ்விடயம் தொடர்பில் முழுமையான அவதானத்தை செலுத்த எதிர்பார்த்துள்ளேன்.'என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும்  தெரிவித்தார்.