எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கைவிடுவதற்கான ஆவணங்களை கையளித்திருப்பதாக வெளியான ஊகங்களை அவரின் பேச்சாளர் மறுத்திருக்கிறார்.

அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கோத்தாபய  தனது பிரஜாவுரிமையைத் துறப்பதற்கு ஆவணங்களை கையளித்திருந்ததாக சில வட்டாரங்களில் கூறப்பட்டது.

ஆனால், அதை நேற்று ஞாயிறன்று மறுத்த பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச, ' முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் அமெரிக்கப் பிரஜாவுரிமை பற்றிய தகவல்கள் பொதுவெளியில் பகிரப்படுவதற்குரியவையல்ல. அவை தனிப்பட்ட தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படமாட்டாது என்று கூறியதுடன் அந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு கருத்தெதையும் கூறமறுத்துவிட்டார்.

கோத்தாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் தங்களுக்கு ஆவணம் எதுவும் கிடைத்ததா இல்லையா என்பது குறித்து கொழும்பு  அமெரிக்கத் தூதரகமும் எதுவும் சொல்ல மறுத்துவிட்டது.