எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான “வீரகேசரி" நாளிதழ், இந்தியாவில் அதிகூடியளவு விற்பனையாகும் பத்திரிகையான “தினத்தந்தி" நாளிதழ் பத்திரிகையின் 8 பக்கங்கள் கொண்ட பிரத்தியேக இலவச இணைப்பிதழை இணைத்து வழங்கவுள்ளது.

குறித்த இணைப்பிதழ் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வீரகேசரி நாளிதழுடன் வெளிவரும்.

இதன் மூலம் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு அதி சிறந்த ஊடகப் பணியாற்ற இரண்டு பத்திரிகை நிறுவனங்களும் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வீரகேசரி 1930 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியச் செட்டியாரால் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு 89 ஆண்டுகள் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு தனது ஊடகச் சேவையை ஆற்றி வருகின்றது.

அதேபோன்று “தினத்தந்தி" நாளிதழ் பத்திரிகையும் 1942 ஆம் ஆண்டு திரு. சி. பா. ஆதித்தனாரால் மதுரையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு 76 ஆண்டுகள் இந்திய வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு தனது ஊடகப் பணியை செய்து வருகின்றது.

“தினத்தந்தி" 16 நகரங்களில் தனது பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவது மட்டுமன்றி ஐக்கிய அரபு நாடான டுபாயிலும் சர்வதேச பத்திரிகையாக அச்சிட்டு வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

“தினத்தந்த’ ஊடகப் பத்திரிகை மூலம் மட்டுமன்றி தொலைக்காட்சி, வானொலி மூலமும் தனது ஊடகப் பணியை தமிழ் பேசும் மக்களுக்கு வழங்கி வருகின்றது. இப்பத்திரிகை தினசரி 18 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகின்றன.

“வீரகேசரி", “தினத்தந்தி" இவ்விரண்டு பத்திரிகைகளும் இணைந்து செயற்பட முனைவதன் பிரதான நோக்கம் அதிகூடிய உயர்ந்த ஊடக சேவையை அபிமான வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்காகும்.

இவ்வகையான இணைப்பு பணியை முன்னெடுத்து செல்வதற்கு இரண்டு பத்திரிகை நிறுவனங்களும் கடந்த 9ஆம் திகதி ( ஜனவரி 2019 ) ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளார்கள்.

வீரகேசரி நாளிதழுடன் தினத்தந்தி இலவச இணைப்பிதழ் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் தினந்தோறும் வெளிவரும் என்பதை தமிழ் பேசும் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

கடந்த 9 ஆம் திகதி (ஜனவரி 2019) ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.ஹரி செல்வநாதன், தினத்தந்தி பத்திரிகையின் தலைவர் திரு. சி. பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.குமார் நடேசன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.