அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் அன் ஆகியோர் வியட்நாமில் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்துவதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் யொங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.

அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

அத்துடன்,  கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் யொங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது. எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.

ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என கிம் யொங் அன்,  எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் யொங் அன் அறிவித்தார்.

அதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2 ஆவது உச்சி மாநாட்டை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் யொங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்கொக் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின. வடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பெப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில்,  இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித தகவலும் அளிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.