சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபோன் வகைகளின் விற்பனை குறைந்திருப்பதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவில் சில ஐபோன் வகைகளின்  விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட வகைகளின் விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் விற்பனையாளர்களுக்கு தகவல் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைக்கப்பட்ட ஐபோன் வகை-களில் ஐபோன் XR வகைக்கு அதிகபட்சமாக 66 டொலர்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. மற்ற ஐபோன் வகைகளுக்கு 59 டொலர்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

விற்பனை குறைவு மற்றும் சாதனங்களுக்கான மோகம் குறைவந்திருப்பதைத் தொடர்ந்து ஐபோன்களின் விலையை குறைப்பது ஆப்பிள் நிறுவனத்திற்கு சரியான முடிவாகவே பார்க்கப்படுகிறது. விலை குறைப்பு தவிர மீளப்பெறும் சலுகைகள் மற்றும் இதர வகைகளில் தள்ளுபடி வழங்க அந்நிறுவனம் முயற்சிப்பதாக தெரிகிறது.

மேலும் ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற சலுகைகளை தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கிறது. அந்த வகையில் ஐபோன் XR விலை 449 டொலர்கள் முதல் என்றும் ஐபோன் XS 699 டொலர்கள் விலையில் ஆராம்பிக்கின்றது. முன்னதாக இந்த ஐபோன்களின் விலை முறையே 699 டொலர்கள் மற்றும் 999 டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய ஐபோன்களின் விற்பனை ஆரம்பமானது முதல் ஐபோன் XR பிரபல வகையாகவும், அதிகம் விற்பனையாகும் வகையாகவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் ஐபோன்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இதர நாடுகளில் விலை குறைப்பு சார்ந்த அறிவிப்பு வெளியாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.