மூளை இரத்த நாள சேதம் அல்லது பக்கவாதம் என்ற நோயிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உலகமெங்கும் பதினைந்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அத்துடன் பக்கவாத பாதிப்பிற்கு ஆளாகி நிரந்தர நோயாளிகளாக ஐம்பது மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கையின் படி ஒவ்வொரு ஆறு நிமிடத்திற்கும் புதிதாக ஒரு பக்கவாத நோயாளி உருவாகிறார். அதனால் இது குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கப்படவேண்டும்.

காரணமற்ற தலைவலி,திடிரென்று மங்கும் கண் பார்வை, ஒரு கண்ணில் மட்டும் தெளிவற்ற பார்வை ஏற்படுவது, காரணமேயில்லாமல் அகால வேளையில் தலைசுற்றல், நடந்து கொண்டிருக்கும் போது தடுமாறுதல், முகம், கை, கால் போன்ற பகுதிகளில் தளர்ச்சியடைவது போன்ற உணர்வு உருவாகுவது அல்லது தொடு உணர்வு குறைவது, பேசுவதில் தடை போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது சிலதோ ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள வைத்தியர்களை சந்தித்து, ஆலோசனையும், பரிசோதனையும் செய்து கொள்ளவேண்டும்.

மூளையில் உள்ள இரத்த நாளங்களில் செல்லும் இரத்தம் உறைவது அல்லது செல்வதில் தடை ஏற்படுவது போன்ற காரணத்தினால் பக்கவாதம் ஏற்படும். அத்துடன் சிலருக்கு மூளையிலுள்ள இரத்த குழாய்களில் கசிவு ஏற்பட்டால் கூட பக்கவாதம் ஏற்படலாம். 

ஆனால் இரத்த கசிவின் காரணமாக ஏற்படும் பக்கவாதத்தை உரிய சிகிச்சையின் மூலம் தடுத்து குணமளிக்க இயலும். ஆனால் இரத்த நாளங்களில் உள்ள இரத்தம் உறைவதால் ஏற்படும் பக்கவாதத்தை குணப்படுத்துவதற்கு, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டு எவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்களோ அதனை பொறுத்து மாறுபடும்.

இத்தகைய நோய் வந்தபிறகு அவர்களது குடும்ப உறுப்பினர்களின் புறகணிப்பிற்கு ஆளாகலாம். இதன் காரணமாக அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பூரண குணமடைவதில் தடை ஏற்படுகிறது. அதனால் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பு முக்கியமானதாகிறது.

டொக்டர் சைமன்.

தொகுப்பு அனுஷா.