தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளியிட்ட கருத்துக்களிற்காக  விசாரணையை எதிர்கொண்டுள்ள ஹர்டிக் பண்டியாவிற்கும் கேஎல் ராகுலிற்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை உடனடி தடையை விதித்துள்ளது.

பெண்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை இரு வீரர்களும் தெரிவித்தனர் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலேயே இந்த தடையை  இந்திய அதிகரிகள் விதித்துள்ளனர்.

விசாரணைகள் முடிவடையும் வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இரு வீரர்களிற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என கோரும் ஆவணத்தினை இரு வீரர்களிற்கும் அனுப்பிவைத்துள்ள கிரிக்கெட் நிர்வாக குழுவினர் உங்களுடைய ஒழுங்கீனம் மற்றும் தவறான நடத்தை குறித்த விசாரைணைகள் ஆரம்பமாகி தற்போது இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் யாப்பிற்கு அமைய நீங்கள் இருவரும் உடனடியாக தடை செய்யப்படுகின்றீர்கள் என கிரிக்கெட் நிர்வாக குழுவினர் இரு வீரர்களிற்கும் தெரிவித்துள்ளனர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை , ஐசிசி, அல்லது மாநில அமைப்பொன்றின் போட்டிகள் அல்லது நிகழ்வுகளில் நீங்கள் கலந்துகொள்ள முடியாது எனவும் இந்திய கிரிக்கெட் நிர்வாக குழுவினர் பண்டியாவிற்கும் ராகுலிற்கும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய தொடரில் கலந்துகொண்டுள்ள இரு வீரர்களும் நாடு திரும்பவுள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்த கருத்துக்களிற்காக ஹர்டிக் பன்டியாவிற்கும் கேஎல் ராகுலிற்கும் போட்டி தடைகளை விதிக்கவேண்டும் என  இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் பரிந்துரை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டை நிர்வகித்து வரும் குழுவை சேர்ந்த வினோத்ரோய் இருவீரர்களிற்கும் இரு போட்டிதடைகளை விதிக்கவேண்டும் என பரிந்துரை செய்திருந்தார்.

அதேவேளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பொருளாளர் அனிருத் சௌத்திரி இந்திய கிரிக்கெட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக இரு வீரர்களிற்கும் எதிரா கடும் தண்டனையை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இரு வீரர்களும் தெரிவித்துள்ள கருத்துக்களை அவதானித்துள்ளேன்,அவை மிகவும் மோசமானவை எனகுறிப்பிட்டுள்ள வினோத்ரோய்  மன்னிப்பு கேட்பதன் மூலம் தவறை மறைத்துவிட முடியாது இரு வீரர்களிற்கும் இரு போட்டி தடை விதி;க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்