- கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்

கலப்பு அரசாங்கங்களுடனான இலங்கையின் பரிசோதனை துயர்மிகுந்த தோல்வியாக முடிந்துவிட்டது. ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் நிருவாகம் அல்லது அமைச்சரவை வேறு கட்சியை ( அல்லது ஒரு கூட்டணியை) சேர்ந்தவர்களைக் கொண்டதாக இருப்பதையுமே இங்கு நான் கலப்பு அரசாங்கம் என்று குறிப்பிடுகிறேன். இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் நாடு மூன்று கலப்பு அரசாங்கங்களைக் கண்டிருக்கிறது. (1) விஜேதுங்க -குமாரதுங்க நிருவாகம், (2) குமாரதுங்க - விக்கிரமசிங்க நிருவாகம், (3) சிறிசேன - விக்கிரமசிங்க நிருவாகம்.

கலப்பு அரசாங்கங்கள் 

       

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எழுச்சி நட்சத்திரமாக அன்று விளங்கிய சந்திரிகா குமாரதுங்க தலைமையில் 1994 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில்  வெற்றிபெற்றபோது முதலாவது கலப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியின் டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியாக இருந்தார். இந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க எந்தவொரு விக்கலும் இல்லாமல் செயற்பட்டது. அதனால் பரிசோதனையின் இந்தப் பகுதி சுமுகமானதாகவும் சர்ச்சைகள் இல்லாததாகவும் அமைந்தது என்று கூறமுடியும்.

        

இந்த அரசாங்கம் பிரச்சினைகள் இல்லாததாக இருந்ததற்கு இரு பிரதான காரணங்கள் இருந்தன. முதலாவது, குமாரதுங்க 1994 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதனால் அது சுார் 5 மாதங்கள் மாத்திரமே நீடித்தது. இரண்டாவதாக,  விஜேதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது அதிகார மோகம்கொண்ட ஒரு அரசியல்வாதியாக இருக்கவில்லை. எதிர்கால அரசியல் அபிலாசையை வளர்த்துக்கொள்ளாத ஒருவராக இருந்த காரணத்தினால்தான் விஜேதுங்கவை பிரதமராக ஜனாதிபதி பிரேமதாச நியமித்தார். பெருமளவுக்கு அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்த லலித் அத்துலத் முதலியை அல்லது காமினி திசாாயக்கவை பிரதமராக நியமிக்க பிரேமதாச விரும்பவில்லை.அவர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளிருந்துகொண்டே பிரேமதாசவுக்கு சவாலை தோற்றுவித்தவர்கள்.

        

1993 மேதினத்தன்று விடுதலை புலிகளின் தற்கொலைக்குண்டு தாக்குதலில் பிரேமதாச கொல்லப்பட்டதை அடுத்து எதிர்பாராதவகையில் விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்க நிர்ப்பந்திக்கப்படடார். அவர் 1994 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுமில்லை. அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக காமினி திசாநாயக்க நியமிக்கப்படுவதை அவர் அனுமதித்தார். தேர்தல் பிரசாரங்களின்போது திசாநாயக்க கொலைசெய்யப்பட்டார். இறுதியில் தேர்தல் போட்டி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையிலானதாக இருந்தது.  விஜேதுங்க நீண்டகால அரசியல் அபிலாசையைக் கொண்டிராதவர் என்பதால் முலாவது கலப்பு அரசாங்கம் சுமுகமாகச் செயற்படக்கூடியதாக இருந்தது.

     

இரண்டாவது கலப்பு அரசாங்கம் அமைக்கப்பட்டபோது குமாரதுங்க தனது இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாக இருந்தார்.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி 2001 டிசம்பர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்தது.குமாரதுங்கவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான " சகவாழ்வு "  அரசாங்கத்திடமிருந்து நாடு பெரிதாக எதிர்பார்த்தது.சுமார் நான்கு வருடங்கள் நீடித்த அந்த அரசாங்கம் குழப்பகரமான ஒன்றாகவே இருந்தது.

        

புதிய அரசாங்கம் முறைப்படி பதவியேற்பதற்கு முன்னதாகவே ஜனதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மல்லுக்கட்டல் தொடங்கிவிட்டது.பாதுகாப்பு அமைச்சு போன்ற முக்கியமான அமைச்சுக்கள் சிலவற்றை தன்வசம் வைத்திருக்க விரும்பிய குமாரதுங்க அமைச்சரவையில் சிலர் சேர்க்கப்படுவதை ஆட்சேபித்தார்.உதாரணமாக , எஸ்.பி.திசாநாயக்க அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை அவர் விரும்பவில்லை. விடுதலை புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் 2002 பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் பெருமளவுக்கு வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தார்கள்.

        

ஐக்கிய தேசிய முன்னணியிடமிருந்து அரசாங்க நிறுவனங்களைப் படிப்படியாகப் பறிக்கத் தொடங்கிய குமாரதுங்க இறுதியில் 2003 நவம்பரில் பாதுகாப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு மற்றும் வெகுஜனத்தொடர்பு, ஊடகத்துறை அமைச்சு ஆகியவற்றைத் தனாவசம் எடுத்துக்கொண்டார்.2004 பெப்ரவரியில் ஜனாதிபதி முன்கூட்டியே பாராளுமன்றத்தைக் கலைத்ததையடுத்து குமாரதுங்க -- விக்கிரமசிங்க அரசாங்கம் முடிவுக்கு வந்தது.அதனால் இந்த அரசாங்கம் சகவாழ்வு நிருவாகமாக இல்லாமல் தொடர்ச்சியான மோதல் நிருவாகமாகவே அமைந்தது.

      

இறுதிப் பரிசோதனை 2015 செப்டெம்பரில் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்தபோது முன்னெடுக்கப்பட்டது. இது ஒப்பீட்டளவில் நேர்மறையான ஒரு அனுபவமாக இருந்திருக்கவேண்டும்.ஏனென்றால், சிறிசேன அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் அவர்கள் ஒரே அரசியல் கூட்டணியின் உதவியுடனேயே தேர்தல்களில் வெற்றிபெற்றார்கள்.( ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு விரைவாகவே சிறிசேன சுதந்திர கட்சியின் தலைமைப் பொறுப்பையும் தனதாக்கிக்கொண்டார்.)

    

ஒரு பதவிக் காலத்துக்கே ஜனாதிபதியாகப் பதவியில் இருக்கப்போவதாக வாக்குறுதி அளித்தபோதிலும் சிறிசேன நீண்டகால அரசியல் அபிலாசைகளை வளர்த்துக்கொண்டார்.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை தன்னால் பெறமுடியாது என்பதை நன்கு தெரிந்துகொண்ட நிலையில் சிறிசேன முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவுடன் சேர்ந்து அரசியல் சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார். பிரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்கவை நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு ராஜபக்சவை ஜனாதிபதி நியமித்தார். அவரின் இந்த நடவடிக்கை நாட்டை படுமோசமான அரசியல் நெருக்கடியொன்றுக்குள் தள்ளிவிட்டது. கடந்த வருடம் நவம்பரில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தபோது நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது.

      

இறுதியில் நீதித்துறை தலையிட்டு  பரதமர் பதவியில் இருந்து விக்கிரமசிங்க நீக்கப்படுவதற்கு முன்னர் இருந்த நிலைமையை மீள ஏற்படுத்தியது.ஆனால், அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பிரச்ினைகள் முற்றாகத் தீர்க்கப்பட்டுவிட்டதற்கான சான்று எதுவுமேயில்லை.

       

கலப்பு அரசாங்கங்களுடனான பரிசோதனையின் மூலமாக ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது.அதாவது ஜனாதிபதியும் பிரதமரும் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர்களாகவும் எதிர்கால அரசியல் வாய்ப்புகள் குறித்து பேரார்வம் கொண்டவர்களாகவும் இருக்கும்போது இலங்கையில் கலப்பு அரசாங்க வகைமாதிரி பயனுடையதாக இருக்கமுடியாது. மறுபுறத்தில், இலங்கையில் வேட்கையில்லாத அரசியல்வாதியைக் காண்பதும் அரிது. அவர்கள் எளிதில் ஒய்வுபெறுவதில்லை. அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதற்கே விரும்புவார்கள்.

       

அதேவேளை, இலங்கையர்கள் எதிர்காலத்தில் கலப்பு அரசாங்கங்களை தோற்றுவிக்கமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிக்கிறார்கள்.எதிர்காலத்தில் தோன்றக்கூடிய நிலைவரங்களை மனதிற்கொண்டு அவர்கள் வாக்களிப்பதில்லை. அவ்வாறு எதிர்கால நிலைவரங்களைப் பற்றி சிந்தித்து அவர்கள் வாக்களிப்பதாக இருந்தாலும்கூட அவர்கள் தவறிழைக்கக்கூடும்.2015 ஆகஸ்டில் சிறிசேனவுக்கும் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நிலவிய உறவின் தன்மையை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது  இவரை அவர் பதவிநீக்குவார் என்று யாராவது  எதிர்பார்திருப்பார்களா?

    

எனவே இன்னொரு கலப்பு பிரச்சினையை எவ்வாறு தவிர்க்கப்போகிறோம்? நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்டிமுறையை ஒழித்துவிட்டு வெஸ்ட்மினிஸ்டர் ஆட்சிமுறைக்குத் திரும்புவது ஒரு மார்க்கம்.ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதென்பது தென்னிலங்கையில் உள்ள அனேகமாக சகல முக்கிய  கட்சிகளினதும் நீண்டகால அரசியல் சுலோகமாக விளங்கிவந்திருக்கிறது. அவ்வாறு வாக்குறுதி அளித்துக்கொண்டு அந்ந கட்சிகளில் பலவும் தேர்தல்களில் வெற்றிபெற்றிருந்தன. என்றாலும் வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்ற மானசீகமான அக்கறை அவர்களுக்கு இருந்ததில்லை. ஜனாதிபதியின் அதிகாரங்களை அவர்கள் விரும்புகிறார்கள்.அதனால், முக்கியான சில அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதிப்பதவி மீது உணர்ச்சிபூர்வமான ஒரு பிணைப்பு இருந்து வந்திருக்கிறது. வெஸ்ட்மினிஸ்டர் முறைக்குத் திரும்பச்சென்றால் அது சிறுபான்மை அரசியல் கட்சிகளை வலுப்படுத்திவிடும் என்றும் பாராளுமன்ற முறையிலான அரசாங்கமொன்றில் அநத கட்சிகளை அனுசரித்துச் செயற்படவேண்டியிருக்கும் என்றும் காரணம் கூறி வேறுசிலர் ஜனாதிபதி ஆட்சிமுறையை மாற்றுவதை எதிர்க்கிறார்கள்.

      

அதனால், ஆட்சிமுறையை மாற்றுவதற்கான  முக்கியமான சகல  செயற்திட்டங்களும் யோசனைகளும் ஏற்கெனவே தோல்வியில் முடிந்துவிட்டன. அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரங்களைத் தளர்த்தும் முயற்சிகளுக்கு கூட எதிர்ப்பு கிளம்பியது. ஜனதா விமுக்தி பெரமுன( ஜே.வி.பி.) யினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான 20 திருத்தச் சட்ட மூலத்தை ஆதரிப்பார் எவரும் இல்லை.எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதன் மூலமாக கலப்ப அரசாங்கப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதும் கூட குறுகிய கால அடிப்படையில் பயன்தரப்போவதில்லை.

ஒரேநாளில் தேர்தல்கள்

     

அடுத்த மார்க்கம் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதாகும்.இதை நடைமுறைப்படுத்துவதற்கு வாக்காளர்களுக்கு இரு வாக்குச் சீட்டுகள் கொடுக்கப்படவேண்டும். இலங்கை மக்கள் பொதுவில் உறுதியான அரசியல் அபிிப்பிராயங்களைக் கொண்டவர்கள்.அதனால், ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கு ஒரு கட்சிக்கும் பாராளுமன்றத்தை தெரிவுசெய்வதற்கு இன்னொரு கட்சிக்கும் அவர்கள் வாக்களிப்பது என்பது சாத்தியமில்லை.மறு வார்த்தைகளில் கூறுவதாயின், ஒரே நாளில் இரு தேர்தல்களும் நடத்தப்படுமானால்  பெரும்பான்மையான இலங்கை வாக்காளர்கள் இரு வாக்குச் சீட்டுகளிலும் ஒரே கட்சிக்கே வாக்களிப்பார்கள்.இது ஒரே கட்சி ( அல்லது ஒரே கூட்டணி) அரசாங்கங்களை உறுதிப்படுத்தும். இங்கு நாம் ஆராய்வது கிரமமான தேர்தல்களையே அன்றி எதிர்பாராத சூழ்நிலைகளினால்   நடத்தப்படவேண்டிவரக்கூடிய விசேட தேர்தல்களையல்ல.

   

இந்த தெரிவு பல பயன்களைக் கொண்டுவரும். முதலாவதாக,  நாடு பல பிரச்சினைகளை குறிப்பாக, கலப்பு அரசாங்கங்களின் விளைவாக தோன்றக்கூடிய உறுதிப்பாடின்மையை தவிர்க்கக்கூடியதாக இருக்கும்.இரண்டாவதாக, இலங்கையில் தேசியத் தேர்தல்கள் பெருஞ்செலவுடன் சம்பந்தப்பட்ட செயன்முறைகளாகும்.இர முக்கிய தேர்தல்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே நாளில் நடத்தினால் அரசாங்க வளங்களில் பெருந்தொகையை சேமிக்கக்கூடியதாக இருக்கும்.மூன்றாவதாக, கடந்த காலத்தில் ஜனாதிபதிகள் பாராளுமன்றத்தில் தங்களது  இருப்பை வலுப்படுத்திக்கொள்வதற்காக பொதுத் தேர்தல்களை துஷ்பிரயோகம் செய்துவந்திருக்கிறார்கள். தங்களது தேவைப்பாடுகளுக்கு வசதியாக வரும்போது பொதுத்தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதிகள் நாட்டம் காட்டுவார்கள். இந்த தெரிவு ஜனாதிபதியின் அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஓரளவுக்கேனும் குறைக்கும் என்று நம்பலாம்.

      

இந்த தெரிவை நடைமுறைப்படுத்துவதற்கு  கடும் அக்கறையுடைய சில தீர்மானங்கள் தேவை. புதிய சட்டமூலமும் கொண்டுவரப்படவேண்டும். அவசியமான சட்டத்தை சாதாரண பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும். தீர்மானங்களையும் சட்டமூலத்தையும் பொறுத்தவரை,தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் சம்பந்தப்படுத்தப்படவேண்டும். எதிர்காலத்தில் கலப்பு அரசாங்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஜனாதிபதியும் அரசாங்கமும் நன்கு விளங்கிக்கொண்டு  முன்கூட்டியே விவேகத்துடன் செயற்படவேண்டும்.

        

ஒரே நாளில் இரு தேர்தல்களையும் நடத்துவது ஏற்புடையதாக இல்லாவிட்டால் அவர்கள் வேறு மாற்றுத் தெரிவுகளை முன்வைக்கவேண்டும்.நாட்டின் நலனுக்காக கலப்பு அரசாங்கங்களை ஜனாதிபதியும் அரசாங்கமும் தவிர்க்கவேண்டும். மேலும் இரு வாக்குச் சீட்டுக்களில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து மக்களுக்கு அறிவூட்டவேண்டும்.விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையும் மாகாணசபை தேர்தல்களும் அறிமுகப்படுத்தப்பட்டபோது புதிய வாக்களிப்பு முறை குறித்து நாம் வாக்காளர்களுக்கு அறிவூட்டியிருந்தோம். இது விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு முக்கியத்துவம்வாய்ந்த பாத்திரத்தை வகிக்கமுடியும்.