(நெவில் அன்தனி)

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகளுடன் தொடர்புபட்ட தகவல்களை அறிவிப்பதற்கு ஜனவரி 16ஆம் திகதி முதல் ஜனவரி 31ஆம் திகதிவரை 16 நாள் பொது மன்னிப்பு காலத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் ஆகியவற்றை முன்னர் அறிவிக்கத் தவறியவர்களுக்கே இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படுகின்றது.

இலங்கையில் குறிப்பிடத்தக்க சவால்களை நாங்கள் எதிர்கொள்வதால் அவற்றுக்கு பதில் காணும் வகையில் பொதுமன்னிப்பு காலம் ஒன்றை ஐ. சி. சி.  வழங்கியிருப்பது இதுவே முதல் தடவை’’ என அலெக்ஸ் மார்ஷல் கூறினார்.

யாரேனும் ஒரு வீரர் அல்லது பங்குகொள்பவரிடம் மோசடியான நடத்தை தொடர்பிலான ஏதேனும் தகவல் இருந்தால், விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்பதற்கான எவ்வித அச்சமுமின்றி அவர்கள் முன்வந்து எங்களுடன் தகவல்களை பகிர்ந்துகொள்ளலாம்’’ என்றார் அவர்.

சாதாராண நிலைமையின் கீழ் மோசடிகளில் ஈடுபடுமாறு அணுகியமை தொடர்பில் தாமதமின்றி அறிவிக்கத் தவறும் பட்சத்தில் வீரர்கள் தடைக்குள்ளாவர். பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதால் அப்படி நேராது.

சனத் ஜயசூரிய உட்பட 3 இலங்கை வீரர்களுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்மோசடி தடுப்பு சட்டக்கோவையின் கீழ் கடந்த சில மாதங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 

அக்டோபர் மாதம் சனத் ஜயசூரிய மீது குற்றஞ்சாட்டப்பட்டதை அடுத்து ‘‘இலங்கை கிரிக்கெட்டில் பாரதூரமான மோசடிகள் இடம்பெறுவதாக சுமத்தப்படும் கடுமையான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஒரு குழுவினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக அலெக்ஸ் மார்ஷல் கூறியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டில் பயிற்றுநர்களில் ஒருவராக பணியாற்றிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் நுவன் ஸொய்சா, முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோருக்கு எதிராகவும் ஐ.சி.சி. குற்றஞ்சாட்டியிருந்தது.

தகவல்களை 24 மணிநேரமும் அறிவிக்கக்கூடிய வகையிலான ஏற்பாடுகளையும் ஐ.சி.சி. செய்துள்ளது.

இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்மோசடிகள் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் அறிவிக்கவென இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில்புரிபவர்களுக்கும் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்படும் என இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவை பிரதிநிதி ஸ்டீவ் ரிச்சர்ட்சன் தெரிவித்திருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் கடந்த புதன்கிழமை காலை நடைபெற்ற விசேட வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இலங்கை கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட்டில் தொழில்புரிபவர்கள் ஆகியோர் முன்னிலையில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிரிக்கெட் வீரர்களாகிய உங்களைப் பாதுகாப்பதற்கு நாங்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம்.  இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் மற்றைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கு உதவும் வகையில்  இங்கு கூடியிருப்பவர்களுடன் நான் பல கலந்துரையாடல்களை நடத்தினேன். 

அடுத்த வாரத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் கிரிக்கெட்டில் தொழில்புரிபவர்களுக்கும் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படும் என அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளோம். 

கிரிக்கெட்துறையில் இடம்பெறும் ஊழல்மோசடிகள் தொடர்பாக அவர்கள் அறிந்த விடயங்களை எங்களிடம் (ஐ.சி.சி.யிடம்) அறிவிக்க சந்தர்ப்பம் வழங்குவோம். எவ்வாறாயினும் ஒரு விடயத்தை நான் இங்கு தெட்டத்தெளிவாக கூறுவது அவசியமாகும். மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கும் ஆட்ட நிர்ணயங்களில் ஈடுபட்டவர்களுக்கும் இந்த பொதுமன்னிப்புக் காலம் எவ்வகையிலும் பொருந்தாது. 

ஆனால் மோசடியில் ஈடுபடுமாறு அணுகப்பட்டவர்கள் அதனை நிராகரித்து, அது பற்றி அறிவிக்காமல் இருந்தவர்களுக்கே இந்த பொது மன்னிப்புக் காலம் வழங்கப்படுகின்றது’’ என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.