(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பு  சபையை நாளைய தினம் கூட்டுவதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய போதிலும் அதனை நிராகரித்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ, ஏற்கனவே அறிவித்தபடி அரசியலமைப்பு சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுமென்பதை உறுதிப்படுத்தினார்.

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போது அரசிலமைப்பு சபை நாளை   வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  கூடுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார். 

கட்சி தலைவர் கூட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட  பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாளை காலை  அரசியல் அமைப்பு சபை கூடும் என குறிப்பிட்டார். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்ச்சி உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி:- அரசியல் அமைப்பு சபை கூடுவது என்றால் மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும். 

ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்காது இன்று  கூறுகின்றீர்கள் நாளை அரசியல் அமைப்பு சபை கூடுமென. ஆகவே இது பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும் எனவே இன்று கூறி நாளை  அரசியலமைப்பு சபையை கூடட முடியாது என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர்,நேற்று  கூடிய கட்சி தலைவர் கூட்டத்தின் பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாளை  அரசியல் அமைப்பு சபை கூடும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனையே நான் கூறுகிறேன் என்றார்.