தமிழ்பேசும் முஸ்லிம் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அவர்களின் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக ஆளுனர்களாக நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்க முன்னேற்றமாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹஸன்அலி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் மாகாண சபை ஆட்சிமுறை 1987 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரையில் கடந்த 31 வருடங்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இப்பதவிகளில் அமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அந்த நிலமை தற்போது மாறுபட்டுள்ளதனை நோக்கும்போது நம்பிக்கையூடடும் புதியதோர் அத்தியாயம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவே ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கருதுகின்றது. அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

இலங்கையில் வாழும் சகல இனங்களினதும் சம்மதத்துடன் முழுமையானதோர் அரசியல் யாப்பானது சட்டரீதியாக நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வரும் வரை, சிறுபான்மை இனங்களின் வாழ்வுரிமை, தனித்துவ அடையாளம், இருப்பு என்பனவற்றைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் தேவையான 22 முக்கிய அம்சங்களை இடைநிலை காப்பீடாக அடையாளம் கண்டு அவற்றை அண்மையில் காத்தான்குடியில் வெற்றிகரமாக் நடந்து முடிந்த அதன் பேராளர் மாநாட்டில் ஐக்கிய சமாதான முன்னணி நிறைவேற்றியிருந்தது. அந்த பட்டியலில் 12ம் மற்றும் 13ம் தீர்மானம்கள் வடக்கு கிழக்கு மாகாணசபை நிர்வாக நடைமுறை சம்பந்தப்பட்டவையாகும்.