(எம்.ஆர்.எம்.வஸீம்)

முதலமைச்சர்களை மீறி ஆளுநர்களுக்கு செயற்படமுடியாது. இரண்டுபேரும் இணைந்து செயற்பட்டால்தான் மாகாண மக்களுக்கு சேவை செய்யமுடியும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் அசாத் சாலியின்  கடமையேற்பு நிகழ்வு இன்று ஆளுநர் பணிமனையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு நாங்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அவசியம் என்பது உணரப்பட்டிருக்கின்றது.

நாட்டில் இடம்பெற்ற இன,மதவாத பிச்சினைகளின்போது ஜனாதிபதி சுயாதீனமாக செயற்பட்டு, அதற்கு தீர்மானம் எடுக்க முடியுமாக இருப்பது நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றமையிலாகும். 

மக்கள் விடுதலை முன்னணியே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மக்கள் விடுதலை முன்னணியினால் ஒருபோதும் இந்த நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு வரமுடியாது. அதனால்தான் அவர்கள் எதிர்க்கின்றனர் என்றார்.