(எம்.மனோசித்ரா)

நிறைவேற்றதிராக  ஜனாதிபதி முறைமையில் காணப்பட்ட அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட 19 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக செயற்பட்டிருந்தார்.கட்சி பேதமின்றி அனைத்து உறுப்பினர்களையும் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். 

எனினும் அதுவே அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின் போது ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு தடையாக அமைந்தது என சுதந்திரகட்சியின் ஊடக பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தசமரசிங்க தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று 4 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு அவர் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏனைய விடயங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று  ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், 

 நீதித்துறை சுயாதீனப்படுத்தியுள்ளதோடு, மத்திய வங்கி பிணைமுறி, ஸ்ரீலங்கா எயா லைன்ஸ் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.