இலங்கையின் தென் கடல் பிராந்தியத்தில் ஈரான் கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படையின் ஒன்றிணைந்த நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்ட 110 கோடி ரூபா பெறுமதியான 110 கிலோ ஹெரோயின் தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் போதைப் பொருள் கடத்தலானது இலங்கை - பாகிஸ்தான் போதைப் பொருள் வலையமைப்பொன்றினுடையது என தற்போதைய விசாரணைகளில் உறுதியாகியுள்ள நிலையில் இந்த சட்ட விரோத வர்த்தகத்தின் இலங்கை முகவர்களைத் தேடி தற்சமயம் இரகசிய விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

தென் கடலில் ஈரான் கொடியுடன் மீன் பிடித்துக்கொண்டிருந்த கப்பலில் இருந்து , போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்களுக்கு அமைவாக கடற்படையினருடன் இணைந்து சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது 110 கிலோ ஹெரோயின் 100 பொதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெறுமதி 11 ஆயிரம் இலட்சம் (110 கோடி) ஆகும். இது தொடர்பில் கப்பலில் இருந்த 11 ஈரானியர்கள், ஒரு பாகிஸ்தனியர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் போது தரையில் இருந்து அதனை கண்காணிப்பு செய்தோரையும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அடையாளம் கண்டிருந்தது. நீர்கொழும்பு, துங்கல்பிட்டிய பகுதியில் உள்ள தங்குமிடமொன்றிலிருந்தே இந் நடவடிக்கை சந்தேக நபர்களால் கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களைக் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், குறித்த நபர்கள் மொன்டரோ ரக ஜீப் வண்டியொன்றில் தப்பிச் செல்ல முயன்றனர். இதன் போது ஜா - எல பகுதியில் அதி வேகப் பாதைக்கு உள் நுழையும் பிரதேசத்தில் வைத்து ஜீப் வண்டிக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்து அதில் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் தங்குமிடத்தில் இருந்த மற்றொருவரையும் கைது செய்தோம். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

அதன்படி மொத்தமாக இதுவரை நாம் 14 சந்தேக நபர்களை இந்த விவகாரத்தில் கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கின்றோம். இந்த போதைப் பொருளின் உள் நாட்டு முகவரை கைது செய்வதே எமது அடுத்த திட்டம். அதற்காக இரகசிய, சூட்சும விசாரணைகள் தொடர்கின்றன. சந்தேக நபர்களின் ஜீப் வண்டி தற்போது பமுணுவ பொலிஸ் நிலையத்திலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கப்பல் தற்சமயம் திக்கோவிட்ட கடற்படை இறங்கு துறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி கமல் சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் ரோஹண பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ ஆகியோரின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன